முழு நேர விவசாயியான என் அப்பாவுக்கு, நான் பிறந்த அதே ஆண்டு, அரசு அறிவித்திருந்த கரும்பு மகசூல் போட்டியில் முதல் பரிசு கிடைத்திருக்கிறது. அதற்கான அதிர்ஷ்ட்ட தேவதையே நான் தானென பூரித்த என் அப்பா, வீட்டிற்கு தனலக்ஷ்மியே பிறந்திருப்பதாய் எண்ணி, 'லக்ஷ்மி' என்று நாமகரணம் சூட்டி மகிழ்ந்திருக்கிறார்.

நான் வளர வளர... என் பெயரிலிருக்கும் 'க்ஷ்' என்ற உச்சரிப்பு எனக்கு உற்சாகத்தை அளித்தாலும், பலர் நாவில் நர்த்தனமாடியது வருத்தத்தையே அளித்தது. 'லச்சுமி' லஷ்மி, ல்ட்சுமி, லெச்சுமி, லக்ஸ்மி என்றெல்லாம் அவரவர் தன் இஷ்டம் போல் அழுத்தம் கொடுக்க கொடுக்க ' அழகற்ற பெயர்' என்று நான் கலங்கிய நாட்கள் நிறைய உண்டு.

அதே நேரம், என் பாட்டு டீச்சரின் அம்மா என்னை ' எச்சுமு' என்றது எனக்கு ரொம்.....பப் பிடித்திருந்தது.

என் தோழியின் பெரியப்பா என்னை 'லட்சு' என்று செல்லமாகக் கூப்பிட்டதும் சாக்லேட் போல் இனித்தது.

அடுத்து சீனு தாத்தா! அவர் என்னை 'லோஷ்மி....லோஷ்மி' என்று நீட்டி ராகத்துடன் கூப்பிட்டதும் எனக்கு பிடித்துதான் இருந்தது. ஆனாலும் நான் என் தோழிகளுடன் இருக்கும்போது அப்படி பாட்டு பாடி கூப்பிட்டது வெட்கத்தையும் தந்திருக்கிறது. தர்மசங்கடமாகவும் இருந்திருக்கிறது.

என் அப்பாவின் நண்பர் M.S.கிட்டு மாமா! அவருக்கு நான் என்றுமே 'பொற்செல்வி' தான். ஒரு நாள் கூட அவர் மறந்ததில்லை. அவர் இறக்கும் வரையில் என்னை 'லக்ஷ்மி' என்று அழைத்ததேயில்லை. பொற்செல்வி என்ற பெயர் எனக்கு பெருமையை கூட தந்தது எனலாம். ஏனெனில், அவர் அப்படி என்னை செல்லமாகக் கூப்பிடுகையில் நான் 40 ஐ கடந்திருந்தேன்.

ராமதுரை அண்ணாவுக்கு நான் இன்றும் 'லக்ஷ்மி பாப்பா'தான். இரு மகள்களுக்குத் தாயாகவும், ஒரு மருமகனையும் கொண்டுள்ள நான் இன்னமும் 'லக்ஷ்மி பாப்பா' என்று ஆசையாக அழைக்கப்படுவதில் பெருமிதமும், பேரானந்தமும் ஏற்படுவதில் வியப்பென்ன இருக்கிறது?

பள்ளி, கல்லூரிக் காலங்களில் கவிதைகள் எழுதி, 'செல்வி.லக்ஷ்மி ராஜாராம்' என்று கையெழுத்திடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். என் ஆருயிர் தோழி 'செல்வி' என் அன்பான அப்பா 'ராஜாராம்' இவர்கள் இருவர் பெயரையும் மணமாகும் வரைதான் என் பெயரோடு இணைத்துக்கொள்ளமுடியும் என்றெல்லாம் எண்ணிக்கொள்வேன். இன்று மணமாகி நான் 'திருமதி.லக்ஷ்மி ரவி' என்று கூறுகையில் என் முழு அறிமுகமும் வெளிப்பட்டு மிடுக்கோடு மிளிர்வதாய் பூரித்துப் போகிறேன்

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.