பேய் வீடு

பொதுவாக பேய் இருக்கிறதா? இல்லையா?. இது உலகில் மண்டையைக் குடையும் கேள்விகளில் ஒன்று.இப்படி ஒரு கேள்விதான், எங்கள் முன் வைக்கப்பட்டது.பேய் இருக்கிறதா இல்லையா என்று நிரூபிக்க வேண்டும்.ஆனால் நடந்தது வேறு. பேயைத் தேடிப்போய் ஒரு காதல் கதையைப் பிடித்து வந்தேன்.சொல்கிறேன் கேளுங்கள்.

நாங்கள் அப்போதுதான் இந்த ஊருக்கு புதிதாக வந்து இருந்தோம்.காரணம் அப்பாவிற்கு கிராம நிர்வாக அதிகாரி வேலை .இந்த ஊருக்கு மாற்றி விட்டார்கள் .ஆரம்பத்தில் திக்கு முக்காடினாலும் , ஒரு வாரத்தில் எல்லாம் பழகிவிட்டது.கொஞ்ச நாள் கழிந்தது.காலையில் பம்புசெட் குளியல், பிறகு பள்ளி , மாலையில் மைதானத்தில் விளையாட்டு ,விடுமுறை நாட்களில் வயல் , புளியமரம், கிணற்றுக் குளியல் என்று கழிந்தது.

ஒருநாள் மைதானத்தில் விளையாடிக் கொண்டு இருந்தோம். என் நண்பன் குமரேசன் பாக்கெட்டில் இருந்து ,ஒரு ரூபாய் விழுந்துவிட்டது.அவன் உடனே சுதாரித்து ,அதை எடுத்து மீண்டும் பத்திரப்படுத்தினான்.

நான் என்ன விஷயம் என்றேன்.

அவன் பதிலுக்கு "இது இல்லைன்னா,சாயந்திரம் கதை கேக்க முடியாது என்றான்.

நான் புரியாமல் விளக்கமா சொல்றா என்றேன்

அவன் பதிலுக்கு ஆலமரத்தடியில இருக்கிறாரே கோட்டான் .அவர்கிட்ட கதை கேட்க என்றான். எனக்கு ஆச்சரியமாகஇருந்தது .

கதையை திரையில் காட்டி காசு சம்பாதிக்கும் காலத்தில், கதை சொல்லி ,காசு சம்பாதிப்பவரை பார்க்கவேண்டும்என்று தோன்றியது.

அவனிடம் "சாயந்திரம் நானும் வர்றேன் என்று சொன்னதும் அவன் முகம் பிரகாசமானது.

சரி நீ வீட்டில் தயாரா இரு .நான் வந்து கூட்டிட்டு போறேன் என்றான்.

பிறகு சொன்ன மாதிரி வீட்டுக்கு வந்தான் ,நான் வீட்டுப்பாடம் முடித்துவிட்டு தயாராக இருந்தேன்.நான் அம்மாவிடம் ஒரு ரூபாய் வேணும் என்றேன்.அவள் எதுக்கு என்றாள் .நாங்கள் கோவிலுக்குப் போகிறோம் என்று அவனைக் காட்டினேன்.அம்மாவும் சீக்கிரம் திரும்பிடனும் என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள்.

நேராக நாங்கள் இருவரும் ஆலமரத்தடிக்குப் போனோம் .அங்கு எங்களுக்கு முன்னாலேயே நிறைய பேர் கூடி இருந்தார்கள்.
கோட்டான் வந்தார்.

ஆறடி உயரம் .ஒல்லியான தேகம் .அட்டைக் கறுப்பு.குழி விழுந்த கண்கள்.முகம் முழுவதும் அம்மைத் தழும்பு.முன் பற்கள் இரண்டு இல்லை.அவரைப் பார்ப்பதற்கே கொஞ்சம் பயமாக இருந்தது. அருகில் வந்தவர் எங்களை எல்லாம் பார்த்து காசு கொண்டாந்தீங்களா? என்றார். அனைவரும் கோரசாக 'ஆம் 'என்று பதில் சொல்லினோம்.அவர் உடனே ஒருவனை பெயர் சொல்லி அழைத்தார் .அவனும் வந்தான்.நாங்கள் கொடுத்த காசை வாங்கி இடுப்பில் முடிந்து கொண்டே ,அவனிடம் ஒரு நாணயத்தைக் கொடுத்து ,கடையில் பீடி வாங்கி வரச் சொன்னார்.அவனும் வாங்கிக்கொண்டு நாலடி நடந்தவன் திரும்பிவந்து "மாமா நான் வரவரைக்கும் கதையை ஆரம்பிக்கக்கூடாது என்று சொல்லிவிட்டு மீண்டும் ஓடினான்.

அவன் வந்த பிறகு.மாமா கதையை ஆரம்பித்தார். பீடி புகையோடு கதையும் எங்களை சூழ்ந்து கொண்டது.சும்மா சொல்லக் கூடாது. மாமா சொன்ன கதை எல்லோருக்கும்போல் எனக்கும் பிடித்துவிட்டது.

பிறகு தினந்தோறும் மாலையானால் நான் ஒரு ரூபாயுடன் ஆஜர்.ஒரு மாதம் போனது.மாமா தொடர்ந்து பேய்க் கதைகளையே சொல்லிக்கொண்டே இருந்தார்.அது எல்லாமே கடைசியில் ஒரே மாதிரியாக முடிந்தது.எனக்கு சலிப்பு தட்டி விட்டது.

நான் மாமாவிடம் நேரடியாக கேட்டே விட்டேன் உண்மையான கதை ஏதாவது ஒன்னு சொல்லுங்க மாமா.

ஒரு நிமிடம் என்னைப் பார்த்தவர் அருகில் அழைத்தார்.நான் தயங்கிக் கொண்டே போக கதை சொல்ல ஆரம்பித்தார்.

அதோ எதிர்க்க தெரியுதே பூட்டி போட்ட பாழடைஞ்ச வீடு ;அது ராசம்மா வீடுன்னு எத்தனை பேருக்குத் தெரியும் என்றார்.

நான் ஊருக்கு புதிது என்பதால் அமைதியாக இருந்தேன்.பையன்களில் பாதிபேர் எனக்குத் தெரியும் என்றார்கள்.

அவரும் கண்ணை உருட்டி சொல்ல ஆரம்பித்தார்.
"அவ பேயான கதை உங்களுக்குத் தெரியுமா? என்றார்.

எல்லோரும் கோரசாக தெரியாது என்றார்கள்.அவர் சொல்ல ஆரம்பித்தார்.

பல வருஷத்துக்கு முன்னாடி இந்த ஊருல சிதம்பரம் செட்டியார்னு ஒருத்தர் இருந்தாரு.அவருக்கு கோயிலில் கணக்குஎழுதுற வேலை. அவருக்கு கல்யாண வயசு ஆயிடுச்சு.அதனால பக்கத்து ஊரிலிருந்து "ராசம்மா '"ன்ற ஒரு பொண்ணை கட்டி வெச்சாங்க. .அவளும் அதே சாதிதான்.அவ இந்த ஊருக்கு வந்தபோது ,ஊரே மூக்கில் விரலை வெச்சுது..

நாங்கள் ஆர்வமாக "ஏன் மாமா "என்று கேட்டோம்.

காரணம் ராசம்மா அத்தனை அழகா இருந்தா.ரெண்டாவது அவ அம்மியிலோ ஆட்டுக்கல் லிலோ அரைச்சி குழம்போ சட்னியோ வைச்சா தெருவுக்கே வாசனை தூக்கி அடிக்கும்.

அவர் சொன்னதும் குழம்பு வாசனைகள் காற்றில் வருவது போல் இருந்தது.

அவ கிணத்தடியில ,கடை வீதியில இறங்கி நடந்தா ,பல் போன கிழவங்க எல்லாம் கண்ணாடியை சரி செஞ்சிட்டு பாத்தாங்க.அவகிட்ட பேச்சுக் கொடுக்க எல்லோரும் துடிச்சாங்க.ஆனா அவ யாருக்கும் மடங்கலை. ஆண்கள் யார் பேசினாலும் ,கள்ளமில்லாம பேசுவா.ஆனா தப்பான எண்ணத்துல அவகிட்ட ஆசையை சொன்னவங்களுக்கு மூக்கு வெட்டினாப் போல பதில் சொன்னா.

அப்புறம் என்ன ஆச்சு மாமா

அதனால எரிச்சல் அடைஞ்ச அவங்க ,அவளோட புருஷன் கிட்ட இல்லாததும் பொல்லாததுமா இவளைப் பத்தி தப்பா சொல்லி அவன் மனசுல சந்தேகத்தைக் கிளப்பி விட்டாங்க.
அவ்வளவுதான் அவளுக்கு அன்னைக்கு பிடிச்சது சனி.

என்ன ஆச்சு மாமா

கணவன் எந்நேரமும் சண்டை போட்டு வார்த்தையால அவளைக் குதறி எடுத்தான்.தினமும் நரகம்.பிறகு ஒருநாள் அவன் கொலைவெறியோடு வந்தான்.

ஏன் மாமா

இவ சின்ன வயசுல யாரையோ காதலிச்ச விஷயம் அவனுக்கு எப்படியோ தெரிஞ்சி போச்சு.

அய்யய்யோ அப்புறம்.

கோவமா அவளைப் பாத்து "சின்ன வயசில நீ யாரையாவது காதலிச்சாயா?ன்னு கேட்டான்.
இவனோட கேள்வியில அதிர்ச்சி ஆகி அவ பதில் சொல்லாம தலையை குனிஞ்சிட்டு இருந்தா.

அப்புறம் மாமா

சும்மாவே பொண்டாட்டியை வாயில போட்டுப்பான் அவன். இப்போ வானத்துக்கும் பூமிக்குமா குதிச்சான்.வார்த்தையால அவளைக் குதறி எடுத்தான்.கடைசியா ஊர் மேய்ஞ்ச வேசியைத்தான் என் தலையில கட்டி விட்டாங்களா?ன்னு கேட்டான். அவ்வளவுதான்..இவளுக்கு வந்தது கோவம்.
கண்ல தண்ணி இருந்தாலும் கோவமா அவன் மொகத்தைப் பாத்து நான் பத்தினி .காதலிச்சவன் என் நிழலைக்கூட தொட விடவில்லை .அதுக்கு நானே சாட்சின்னு சொன்னா.அதைக் கேட்ட அவன் தெனாவட்டா சிரிச்சிக்கிட்டு அப்படின்னா வாழை மரத்தை எரிச்சிக் காட்டுன்னு சொன்னான்.
அவளுக்கு என்ன தோனுச்சோ. நேராப் போய் புழக்கடையில இருந்த கிணத்துல குதிச்சிட்டா .

நாங்கள் அதிர்ச்சியாக "அய்யய்யோ அப்புறம் "என்று கேட்டோம்.

மாமா சோகமாக "அப்புறம் என்ன பிறகு அவ பிணத்தைத் தான் மீட்டாங்க .உயிரோடு இருக்கும்போது பொய் சொன்ன ஊர் வாய் ,செத்தவளைப் பத்தி பேச முடியாம அடங்கிடுச்சி.இப்போதான் செட்டியாருக்கு உண்மை தெரிஞ்சது.

நான் ஆர்வமாக "என்ன உண்மை மாமா."என்று கேட்டேன்.

அநியாயமா ஊர் பேச்சைக் கேட்டு ,மனைவியை சாகடிச்சிட்டோமோன்னு மனசுக்குள்ள புழுங்கினார்.ஒரு கட்டத்தில ஊரையே காலி செஞ்சிட்டுப் போய்ட்டார்.ஆனா இந்த வீடு மட்டும் இப்போ பாழடைஞ்சி இருக்குது.இப்பவும் அந்த வீட்டில ராசம்மா பேயா இருக்கா .நைட்டுல அலையுறான்னு எல்லோரும் நம்புறாங்க.

அவர் சொன்னதும் நாங்கள் திரும்பி அந்த வீட்டைப் பார்க்க அந்த வீடே ஒரு பேய்போல எங்களை பயமுறுத்துவதுபோல் இருந்தது.

நாங்கள் ஆர்வமாக "அந்த வீட்டில ராசம்மா இருக்கிறதை யார் பாத்தது 'என்று கேட்டோம்.

அவர் பதிலுக்கு ஆரம்பத்தில ராசம்மா இருக்கிறது யாருக்கும் தெரியாது.அந்த வீட்டில இருக்கிற கிணத்துல பொம்பளைங்க தண்ணீ மொண்டுட்டு இருந்தாங்க.பிறகு ஏதோதோ வினோதமான சத்தங்க கேட்க ,இப்போ யாரும் அந்த பக்கம் போவதில்லை .வீடு பாழடைஞ்சி போயிட்டது என்று சொல்லி முடித்தார்.

நாங்கள் எல்லோரும் திரும்பிப் பார்த்தமாத்திரத்தில் ,வீட்டுக்கு பின்னால் இருந்த கிணற்றின் மீது ராசம்மா உட்கார்ந்து கொண்டு எங்களைப் பார்த்து கைகொட்டி சிரிப்பதுபோல் ஒரு கற்பனை ,எங்களை பயமுறுத்துவது போல் இருந்தது.

அவர் கதையை முடித்ததும் எல்லோரும் வீட்டுக்குச் செல்ல ஆரம்பித்தார்கள்.
நான் மாமாவின் முகத்தைப் பார்த்தேன். அவர் கண்கள் கலங்கி இருந்தது.நாங்கள் வீட்டுக்குத் திரும்பி வந்து விட்டோம்.

வரும் வழியில் நான் குமரேசனிடம் கேட்டேன்.

மாமா சொல்றது உண்மையா? நம்பற மாதிரி இல்லையே.

அவன் பதிலுக்கு "ஆமாண்டா நானும் உன்னை மாதிரி மொதல்ல நம்பலை.அப்புறம் எங்க அப்பாகிட்ட இதே கதையைக் கேட்டு இருக்கேன்.மாமா சொல்றது உண்மைதான் என்றான்.

அதற்குப் பிறகு நாங்கள் தினந்தோறும் மாமாவிடம் கதை கேட்டோம்.பிறகு அவர் சொல்லும் கதைகள் எல்லாம் ராசம்மாவையே சுற்றி சுற்றி வந்தது.இப்போது மீண்டும் எனக்கு சலிப்பு ஏற்பட்டு விட்டது. ஒருநாள் நான் வேறு ஒரு கதையை ஆரம்பித்தேன்.

கேலியாக "மாமா அந்த வீட்டில ராசம்மா பேய் எதுவும் இல்லை.நீங்க கதை விடுறீங்க"என்றேன்.

இப்போது மாமா மட்டும் இல்லாமல் அங்கிருந்த எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர்.காரணம் இதுவரை மாமா பேய் என்ற பிம்பத்தை ,கதை வடிவில் காட்டி எங்களை பிரமிக்க வைத்து இருந்தார்.இப்போது அதை நான் ஒரு சவால் மூலம் உடைக்கத் தயார் ஆனேன்.அதனால்தான்.

நான் மீண்டும் "அடுத்த வாரம் திருவிழா.அப்போ இந்த வீட்டு மாடியில ஒரு நைட்டு முழுவதும் இருந்து காமிக்கிறேன் ,அப்படி நான் செஞ்ட்டா ,மாமா பேய்க் கதை சொல்றதை விட்டுடனும் என்றேன்.

பையன்கள் குஷியானார்கள்.மாமா அமைதியாக இருந்தார்.

பிறகு அவர் தயக்கத்துடன் "சின்ன பசங்க நீங்க, ஏதாவது விபரீதம் ஆகிடப் போகுது என்றார்.

நான் கேலியாக சிரித்துக் கொண்டே "போட்டியில தோத்துடுவோம்னு மாமா பயப்படுறார் "என்றேன்.

பையன்களும் ஆமாம் என்றார்கள்.அதனால் வேறு வழியின்றி ,மாமா போட்டிக்கு ஒத்துக் கொண்டார்.

ஒரு இரவு முழுவதும் மொட்டை மாடியில் நான்கு பேர் தங்க வேண்டும் என்று முடிவானது.அந்த நாளும் வந்தது.வீட்டில் தெருக்கூத்து என்று சொல்லிவிட்டு மாமா வீட்டுக்கு வந்தேன்.
தெருக்கூத்து என்றால் விடிய விடிய நடக்கும் .அதனால் வீட்டில் தேட மாட்டார்கள் என்று குமரேசன்தான் ஐடியா கொடுத்தான்.

போட்டி அன்று மாலை சாப்பிட்டுவிட்டு நேராக மாமா வீட்டுக்குப் போனோம்.தண்ணீர் பாய் போர்வை எல்லாம் ஏற்பாடு ஆனது.முதலில் நான்கு பேர் போவதாகத்தான் ஏற்பாடு.வீட்டுக்கு அருகில் வந்தவர்கள் ,வீட்டைப் பார்த்ததும் பீதியில் கழண்டு விட்டார்கள்.

குமரேசனுக்கு நடுக்கம் வந்துவிட்டது.என்னை சீண்டியவன் "நாமும் வீட்டுக்குப் போய்டலாமா ? என்றான்.

நான் பதிலுக்கு "வாடா நான் பாத்துக்கிறேன் "என்றேன்.

அவன் பயத்தில் "என்னவோ தெருக்கூத்துன்னு வீட்டில பொய் சொல்லிட்டு வந்தேன். இப்போ ராசம்மா கையால பலி ஆகப்போறேன் "என்று புலம்பினான்.அவனை அழைத்துக்கொண்டு போனேன்.மாமா வீடுவரை வந்து எங்களை அனுப்பி வைத்தார்.நாங்கள் மேலே போய் படுத்துக்கொண்டு ,அவரைப் போகச் சொன்னோம்.அவரும் வீட்டுக்குப் போய்விட்டார்.

மாடிக்குப் போனதும் குமரேசன் பயத்தில் தூங்கி விட்டான். நான் இரவெல்லாம் தூங்கவில்லை.பின்பு விடியற்காலையில் எப்போது தூங்கினேனோ தெரியாது.

மாமாதான் காலையில் வந்து எழுப்பினார்.இருவரும் பாய் தலகாணி எல்லாவற்றையும் அவரிடம் கொடுத்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பினோம்.
கீழே வந்தவன் வீட்டின் பூட்டை ஆராய்ந்தேன்.அது துரு பிடித்து தூசி ஏறிப்போய் இருந்தது.மாமாவும் குமரேசனும் என்னைப் புரியாமல் பார்த்தார்கள்.

போகின்ற வழியில் நான் குமரேசனிடம் கேட்டேன். நைட்டு நீ ஏதாவது பாத்தியா? என்றேன்.

அவன் பதிலுக்கு "இல்லை பயத்துல நான் போனதும் தூங்கிட்டேன் என்றான்.

நான் வீட்டிற்குப் போய் குளித்துவிட்டு சாப்பிட அமர்ந்தேன். தட்டில் இட்லியும் கறி குழம்பும் வந்தது.ஒரு பிடி பிடித்துவிட்டு நேராக மாமாவிடம் போனேன்.மாமா மட்டும் தனியாக இருந்தார்.

நான் அவரிடம் "மாமா கதையை நீங்க முழுசா சொல்லலை."என்றேன்.

அவர் புரியாமல் "என்ன கதை"என்றார்.

ராசம்மா எதனால இறந்தா?என்றேன்.

அவர் பதிலுக்கு அவளோட புருசன் திட்டியதால என்றார்.

நான் அவரைப் பார்த்து இல்லை "என்றேன்.

அவர் கேலியாக சிரித்துக் கொண்டே "வேற எப்படி"என்று கேட்டார்.

நான் கேலிப் புன்னகையுடன் அவளோட காதலன்கூட பேசிட்டு இருக்கும்போது, புருஷன் பாத்துட்டதால என்றேன்.

ஒரு நொடியில் அவர் முகம் பேய் அறைந்தது போல் ஆனது.

நான் சிரித்துக்கொண்டே "என்ன மாமா கரெக்டா "என்று கேட்டேன்.

அவர் பதிலுக்கு "அதுவந்து "என்று திணறினார்.

எனக்குப் புரிந்து விட்டது. அவர் ஏதாவொரு உண்மையை நம்மிடம் மறைக்கிறார் என்று.

நான் அவரிடம் "இப்போ உண்மையைச் சொல்லுங்க"என்று கேட்டேன்.

அவர் தயக்கமாக "என்ன உண்மை அதான் புருஷன் சந்தேகம் வந்து சண்டை போட்டதால "என்றார்.

நான் சத்தியமாக "என்று கையை நீட்டினேன். அவர் கையை சத்தியம் செய்ய நீட்டி பின்பு வெடுக்கென்று பின்னால் இழுத்துக் கொண்டார்.

நான் புன்னகையுடன் " ;யாரிடமும் சொல்ல மாட்டேன் என் மேல சத்தியம் .உண்மையைச் சொல்லுங்க" என்றேன்.

இரண்டு நொடி யோசித்து விட்டு அவர் சொல்ல ஆரம்பித்தார்.

தம்பி ராசம்மா கதை இதுவரை சொன்னதெல்லாம் என்னவோ உண்மைதான்.சொல்லாம விட்டது அவளோட காதலன் கதைதான்...

நான் ஆர்வமாக "அது என்ன கதை மாமா "என்று கேட்டேன்.

அவர் பதிலுக்கு "தம்பி ராசம்மா வீடு செட்டியார். அதனால கொஞ்சம் வசதி.அவங்க வீட்டில முனியாண்டின்னு ஒருத்தன் தினசரி பால் கொண்டு வந்து கொடுக்கிற வேலை செஞ்சிட்டு வந்தான்.அவளை விட அஞ்சி வயசு பெரியவன். அவளுக்குப் பத்து வயசா இருந்தபோது திடீர்னு ஒருநாள் அந்த பொண்ணை பாம்பு கடிச்சிட்டது.

நான் திடுக்கிட்டு "ஐயையோ அப்புறம் "என்று கேட்டேன்.

அதுவும் கருநாகம்.எல்லோரும் சேந்து அவளை வைத்தியர்கிட்ட தூக்கிட்டு ஓடினாங்க ஆனா அந்த பொடியன் எல்லோரும் ஆச்சரியப்படுற மாதிரி தைரியமா பாம்பு கடிச்ச இடத்தில வாயை வெச்சு இரத்தத்தை உறிஞ்சி ,அந்தப் பொண்ணை முக்கால்வாசி பிழைக்க வெச்சான்.

நான் கேலியாக இதில என்ன மாமா ஆச்சரியம் என்று கேட்டேன்.

அவர் திடுக்கிட்டு என்ன இப்படி கேட்டுட்டே. ,கருநாகம் கடிச்சா யாரும் வாய வைச்சி உரிய மாட்டாங்க "என்றார்.

நான் ஆர்வமாக "ஏன் "என்று கேட்டேன்.

அவர் பதிலுக்கு "காரணம் தப்பித் தவறி ஒரு துளி வெசம் உள்ளே போச்சுன்னா அவ்வளவுதான் ஆள் காலி...என்றார்.

நான் திடுக்கிட்டு " அப்ப அந்த பொண்ணு என்ன ஆனா "என்று கேட்டேன்.

இவன் பண்ண காரியத்தால முக்கால்வாசி. வைத்தியத்துல கால்வாசின்னு பொண்ணு பொழைச்சிக்கிட்டா...ஆனா அதுக்கு பிறகு நடந்தது கூத்து

நான் ஆர்வமாக "என்ன மாமா "என்று கேட்டேன்.

இந்த சம்பவத்துக்குப் பிறகு அந்த பையன் இந்த பொண்ணோட வீட்டிலேயே மத்த பையன்க மாதிரி வேலைக்கு சேந்துட்டான்.ஆனா இவன் கீழ் ஜாதி.

நான் ஆர்வமாக "அப்புறம் "என்று கேட்டேன்.

மத்த பசங்க வீட்ல இருந்தாலும் அவகிட்ட பேச முடியாது.ஆனா இவன் கீழ் ஜாதியா இருந்தாலும் அவ உயிரைக் காப்பாத்துனதால அவளோட எப்பவுமே விளையாடிட்டு இருந்தான்.வருஷங்க வளர வளர அவங்களும் வளந்தாங்க.அதோட அவங்க நெருக்கமும் வளந்துச்சு.
ஒருநாள் வீட்டில யாருமில்லை.
அப்போ..

என்ன ஆச்சு மாமா.

இவங்க ரெண்டு பேரு மட்டும் கொல்லையில கிணத்தடியில உக்காந்து பேசிட்டு இருந்தாங்க .இதை பக்கத்து வீட்டில இருந்த மாமி ;மாடிக்கு
எதையோ காயவைக்க வந்தவ பாத்துட்டா..

ஐயையோ அப்புறம்.

அப்புறம் என்ன வீட்டுக்கு ஆளுங்க திரும்பியதும் கண் காது மூக்கு வெச்சு இல்லாததும் பொல்லாததுமா பரப்பி விட்டா .அவ்வளவு தான்.

என்ன ஆச்சு மாமா

எல்லோரும் சேந்து அந்த பையனை ஊரைவிட்டே அடிச்சி துரத்திட்டாங்க.இந்த பொண்ணுக்கு செட்டியாரோட கல்யாணம் நடந்து போச்சு.

ஐயையோ அப்புறம் என்ன ஆச்சு.

என்ன ஆச்சா.இவளுக்கு கல்யாணம் ஆகி மூனு மாசம் போச்சு.ஊரை விட்டு துரத்தி அடிக்கப்பட்ட அந்த பையன் இவளைப் பத்தி விசாரிச்சிட்டு எப்படியோ வந்து சேந்தான்.

அப்புறம்

ஊர்க்காரங்ககிட்ட சொல்லி அவ வீட்டுக்கு எதிரிலியே ஒரு குடிசை போட்டுக்கி்ட்டான்.
அவ புருஷன் அவளை சண்டை போடும்போது எல்லாம் எதிர் வீடுன்ற முறையில இவன் போய் சண்டையைத் தடுத்து விடுவான்.புருஷன்காரன் வெளியே போன பிறகு அவளை ஆறுதல் சொல்லி தேத்துவான்.இவன் வார்த்தையைக் கேட்டு அவளும் சமாதானம் ஆவா.ஆனா ஒருநாள்.

என்ன ஆச்சு மாமா

ஒருநாள் அவளோட புருஷன் சண்டை போட்டுட்டு வெளியே போய்ட்டான்.திடீர்னு எதையோ எடுக்கத் திரும்பி வந்தவன் ;கொள்ளையில ஏதோ பேச்சுச் சத்தம் கேக்கவே ,மறைஞ்சி நின்னு ஒட்டுக் கேட்டான் .இவங்க ரெண்டு பேரும் அது தெரியாம பேசிட்டு இருந்தாங்க.அவ்ளோதான்.

என்ன ஆச்சு மாமா.

இவங்களோட காதல் விஷயம் அவனுக்குத் தெரிஞ்சி போச்சு.சும்மாவே சந்தேகத்துல குதிக்கிறவன் அவன் .இப்போ சும்மா இருப்பானா..

என்ன பண்ணான்.

ஆத்திரத்தில் ஓடிப்போய் எட்டி ஒன்னு உட்டான்.ரெண்டு பேரும் சேந்து தரையில விழுந்தாங்க.அவளோட காதலனைப் புடிச்சவன் வெறித்தனமா அவனைத் தாக்கினான்.அதில அவனோட முன் பள்ளுகூட ரெண்டு பெயர்ந்துட்டது.இவ போய் புருஷன் காலுல விழுந்து அவரை அடிக்காதீங்கன்னு கெஞ்சுறா...அவனுக்கு வந்ததே கோவம்.

நான் புரியாமல் "ஏன்"என்று கேட்டேன்.

பின்னே கட்ன புருஷன் கிட்டயே இன்னொரு ஆம்பிளைக்கு வக்காலத்து வாங்கினா.கோவத்துல இன்னும் அந்த காதலனை பொளந்து எடுத்தான். அவ புருஷனோட காலைப் புடிச்சிக்கிட்டு அவனை அடிப்பதை நிறுத்தாட்டா உயிரை விட்டுடுவேன்னு சொன்னா.அவனுக்கு வெறி ஏறிடுச்சி..

அப்புறம்

அவன் பக்கத்தில இருந்த கத்தியை கையில எடுத்துட்டான்.காதலன் உயிரைக் காப்பாத்த ,கொலைப் பழியில இருந்து புருஷனைக் காப்பாத்த ,அந்த நேரத்தில சண்டையை நிறுத்த வேற வழி இல்லாம ,ராசம்மா பட்டுனு கெணத்துல குதிச்சிட்டா.

நான் திடுக்கிட்டு "அய்யய்யோ அப்புறம் "என்று கேட்டேன்.

அவர் சோகமாக "அப்புறம் என்ன .அவ செத்துப் போய்ட்டா.அவ புருஷன் ஊரைவிட்டு போய்ட்டான்...என்றார்.

நான் ஆர்வமாக "அவளோட காதலன் "என்ன ஆனான் என்று கேட்டேன்.

அவர் பதிலுக்கு "அவன் எங்கே போனானோ தெரியலை "என்றார்.

நான் சிரித்துக்கொண்டே "அவர் எங்கேயும் போல இந்த ஊருலதான் இருக்காரு என்று சொன்னேன்.

அவர் திடுக்கிட்டு பரபரப்பாக "இந்த ஊர்லயா எங்கே யார் "என்று கேட்டார்.

நான் அவருடைய கண்களைப் பார்த்தேன்.அவர் தலையை குனிந்து கொண்டார்.

மாமா உண்மையை சொல்லுங்க என்று கேட்டேன்.

அவர் நிமிர்ந்து என்னைப் பார்த்து "எனக்குத் தெரியாது "என்றார்.

நான் கேலிப் புன்னகையுடன் "முனியாண்டி எங்கும் போகலை. இங்கதான் இருக்கார் என்று அவரைக் காட்டினேன்.
அவர் அதிர்ச்சியில் எழுந்து நின்று விட்டார்.

பிறகு சமாளித்துக்கொண்டு "என்ன தம்பி ஒளர்றே "என்றார்.

நான் எதுவும் பேசாமல் சத்தியம் பண்ணுங்க என்று கையை நீட்டினேன்.
அவர் இரண்டு பக்கமும் யாராவது வருகிறார்களா என்று பார்த்துவிட்டு ,பிறகு என் கையைப் பிடித்துக்கொண்டு "தம்பி "என்று கெஞ்சினார்.நான் பதிலுக்கு "பயப்படாதீங்க மாமா .யார்கிட்டயும் சொல்லமாட்டேன்... என்று அவருக்கு உறுதி அளித்தேன்.அவர் சாந்தமானார்.
நான் கேட்டேன் "உங்க உண்மையான பேர் கோட்டான் இல்லை முணியாண்டி சரியா.அவர் வாய் பேசாமல் தலையை மட்டும் ஆட்டினார்.கொஞ்ச நாள் போனது.

மாமா போட்டியில் தோற்று விட்டதால், ராஜா கதைகளுக்கு மாறிவிட்டார்.நான் சொன்ன மாதிரி பேய் இல்லை என்று நிரூபிக்க பசங்க மத்தியில் கேப்டன் என்று பெயர் வைத்து அழைக்கப்பட்டேன்.குமரேசன் வைஸ் கேப்டன் என்று அழைக்கப்பட்டான்.
வழக்கம்போல் பள்ளிக்குப் போய் வந்தோம்.

உங்களிடம் ஒன்று சொல்ல மறந்து விட்டேனே. நாங்கள் மாடியில் படுத்துக்கொண்டு இருந்த போது முதலில் விழித்து இருந்தவன் ;பின்னர் தூங்கி விட்டேன். எப்போதும் ஒரு பக்கமாக தூங்குவது என் இயல்பு.திடீரென்று ஏதோ சத்தம் கேட்பது போல் இருந்தது.நான் கண் விழித்தேன்.காதை தரையில் வைத்து உற்று கேட்க என் உடல் உதறியது. அதுபோக ரோமம் சிலிர்த்துக் கொண்டது. இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது.குமரேசனை எழுப்பலாம் என்று பார்த்தால் கைகால்களை அசைக்க முடியவில்லை.

காரணம் கீழே வீட்டில் யாரோ அம்மி அரைப்பது போலவும் ,அரவைக்கல்லில் அரைப்பது போலவும் ,இரும்பு பாக்கு இடிப்பினில் ,இடிப்பது போலவும் இருந்தது.நான் அசையாமல் கேட்டுக்கொண்டு இருந்தேன் .முதலில் கலகலவென்று ஒரு பெண்ணின் சிரிப்பு சத்தம் கேட்டது பின்னர் சிறிது நேரம் கழித்து சிரிப்பு சத்தம் ஒப்பாரியாக மாறியது.அவள் பாடியது இதுதான்.

"சாதி சனம் மாறியதால
பாதியில பிரிஞ்சோமே,
காசு பணம் இல்லையினு
கட்டித்தான் வைக்கலியே
கருநாகம் தீண்டயில
கட்டையில போயிருந்தா
ஊரூ சனம் வந்துதான்
உசுரக் கொடுத்திடுமோ.
பாதியில கட்டிக்கிட்ட
பாவி பையன் பாக்கலன்னா
நேசம் வச்ச ராசாவே
நெசமும் இருந்திருப்பேன்
ஊரைவிட்டு போனபின்னே.
உசுரு துடிக்குமுன்னு
தேடி வந்த என்ராசா
கூடி வாழ கொடுக்கலையே. பாவிப்பையன் புருசன்தான்
பாத்திடாம இருந்திருந்தா
காடுபோய் சேரும்வரை உன் கண்ணைத்தான் பாத்திருப்பேன் .அடுத்த ஒரு சென்மம் வந்தா
ஏழையாக நான் பொறப்பேன்
அதுவரை காத்து கெட
என்னோட எதித்த வீட்டு
முனியாண்டி சின்ன ராசா

(முடிந்தது)

இந்த கதையில் வரும் அந்த காதலனுடைய பேர்தான் முனியாண்டி .ஆனால் நிஜத்தில் காவியத்தலைவன்.

காரணம் அவள் உயிருடன் இருந்தவரை ,வீடு வாசல் ஊர் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவளைத் தேடிக்கொண்டு வந்து அவளுடைய கண்களை மட்டும் பார்த்துக்கொண்டு வாழ்ந்து வந்தான்.

அவள் இறந்த பிறகு அவள் இருந்த வீட்டை மட்டும் பார்த்துக்கொண்டு அவள் நினைவாக வாழ்கிறான் பாருங்கள்.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.