எனதருமை தோழியே


இரவு ஒன்பது மணி இருக்கும். "ஃபிரீ ஆஹ் டா" என்று வாட்ஸ் ஆப் இல் ஒரு குறுஞ்செய்தி வந்தது. "இரு டி சாப்டுட்டு கால் பண்றேன்" என்று சொல்லிவிட்டு சிறிது நேரத்தில் சாப்பிட்டு வந்து எப்பொழுதும் போல நண்பர்களுடன் உரையாடல் தொடர்ந்தது. சிறிது நேரத்தில் ஏதோ நினைவுக்கு வந்தவன் போல அலைபேசியை எடுத்து அவளுக்கு டயல் செய்தேன். எப்போதும் போல என்ன செய்கிறாய் , சாப்பிட்டு விட்டாயா , அம்மா,அக்கா அனைவரும் நலமா என்று அக்கறை குறையாமல் நலம் விசாரித்தாள். நானும் பதிலுக்கு எப்போதும் போல விசாரித்தேன். எப்போதும் அலைபேசியிலோ அல்லது நேரிலோ உரையாடல் தொடங்கும் போதும் அதைத் தொடங்குவதிலும், நலம் விசாரிப்பதிலும் அவளே முதலிடத்தில் முந்தியடித்துக் கொண்டு நிற்பாள். நான், ஏதாவது முக்கியமான விஷயமா என்று கேட்டேன். எதுவும் இல்லை சும்மா தான் பேசலாம் என்று அழைத்தேன் என்றாள். எனக்கு அவளைப் பற்றி ஓரளவுக்கு நன்றாகவே தெரியும். நேற்றோடு (22-2-2017) நாங்கள் சந்தித்து சரியாக நான்கு ஆண்டுகள் ஆறு மாதங்கள் கடந்து விட்டன. இடைப்பட்ட காலங்களில் அவளை ஓரளவிற்கு புரிந்து கொண்டேன் என்றே நினைக்கிறேன். ஆனால் ஒரு பெண்ணின் மனதை முழுவதும் புரிந்து கொள்ள உலகில் இதுவரை ஒருவன் இல்லை என்ற என்னுடைய எண்ணம் தவறாக வாய்ப்புகள் அதிகம் என்றே தோன்றுகிறது. நான் "இல்லை ஏதோ சொல்ல வருகிறாய், சொல் " என்றேன். அவளோ "கேட்பதா,வேண்டாமா என்று குழம்புகிறேன்" என்றாள். என்னிடம் கேட்பதற்கு என்ன தயக்கம் என்றதும் "கும்பகோணம் வரையிலும் என்னோடு வர முடியுமா " என்றாள். எனக்கோ தூக்கி வாரிப் போட்டது. அதர்க்கு முக்கிய காரணம் என்றோ ஒரு நாள் ஒரு நீண்ட உரையாடலின் போது அவள் இப்படி என்றேனும் ஒரு நாள் நடக்க வாய்ப்பிருப்பதாகவும் அதற்கு நானும் நிச்சயம் வர வேண்டும் என்று சொன்னதும்தான். அவள் ஒருவரை காதலித்து வருகிறாள். அவரும் தான். இதற்கு இவளது வீட்டில் சம்மதம். ஆனால் அவரது வீட்டில் காரணமில்லாமல் வெறுப்பு. அன்று அவள் சொன்னால், ஏதேனும் ஒரு சமயத்தில் என் பெற்றோர் சம்மதத்தோடோ அல்லது இல்லாமலோ நான் அவரை பதிவுத் திருமணம் செய்து கொண்டால் நீ நிச்சயம் வர வேண்டும் என்று. அந்த உரையாடல் சில நொடிகள் மனதில் ஓடிக்கொண்டிருக்க "Register marriage பண்ணிக்க போறியாடி" என்று ஆவலும்,பயமும் கலந்த குரலில் கேட்டேன். "இல்லை" என்று பொறுமையாய் பதிலளித்த பின்பு "கும்பகோணத்தில் ஏதோ கோவிலுக்கு தோஷம் கழிக்க உடனடியாக போக வேண்டும் என்றும் தனக்கு சென்னையில் இருந்து தனியாக போக பயமாக இருப்பதாகவும் அதைத் தன் பெற்றோரிடம் கூறியபோது அவர்கள் இவளிடம் "சுரேஷ் அங்க தான இருக்கான், அவனிடம் கேட்டுப் பார்" என்று சொன்னார்கள் என்றும் தயங்கித் தயங்கி ஏதோ சொல்லக் கூடாத ஒன்றை சொல்லி விட்டது போல பொறுமையாய் சொன்னாள்".அவளது பெற்றோருக்கும் எனக்கும் இருக்கும் அறிமுகம் ஒருமுறை கல்லூரியின் இறுதியாண்டில் அவளது பெற்றோர்கள் கல்லூரிக்கு வந்தபோது அவள் அவர்களிடம் என்னை அறிமுகப்படுத்தியதும் அப்போது நான் அவர்களிடம் பேசிய அந்த இரண்டு நிமிடங்கள் மட்டும்தான். நான் உடனே சரி போகலாம் எப்போது என்று கேட்டவுடன் அடுத்த வாரம் சனிக்கிழமை இரவு என்றாள். நானும் ஏதோ குழப்பத்துடன் உண்மையில் முழுவதும் சம்மதம் இல்லாமல் சரி என்றேன். அதற்கு காரணமாக நான் கருதுபவை "இதற்கு முன் நான் எந்தப் பெண்ணுடனும் சேர்ந்து இப்படி வெளியில் போனது இல்லை (சத்தியமா இல்லிங்க) " என்ற ஒன்று தான். இதை எப்படி ஒரு காரணமாக நான் அவளிடம் சொல்வது. அப்படி சொன்னால் அவள் என்னைப் பற்றி என்ன நினைப்பாள் என்று ஒரு பக்கம் எண்ண அலைகள் ஓடிக்கொண்டிருக்க திடீரென்று அடுத்த வார இறுதியில் கேரளா செல்லவிருப்பது நினைவுக்கு வந்தது.இதை அவளிடம் சொன்னவுடன் அவள் குழம்பிப் போனாள். சிறிது யோசனைக்குப் பிறகு நாளை இரவு செல்வதென்றால் சம்மதமா என்று கேட்டாள். நானும் இந்த வார இறுதியில் எந்த வேலையும் இல்லை, சம்மதம் என்றேன். உண்மையில் எந்த வார இறுதியிலும் எந்த வேலையும் இருப்பதில்லை. சரி, தான் பெற்றோரிடமும், அத்தையிடமும் கேட்டுவிட்டு சொல்வதாகச் சொல்லி அலைபேசியை துண்டித்து விட்டாள். நானோ ஏதோ ஒரு குழப்பத்துடன் இருந்தேன். சிறிது நேரத்தில் அலைபேசி மீண்டும் ஒலித்தது. நிச்சயம் அவளாகத்தான் இருக்கும் என்ற நினைப்போடு எடுத்துப் பார்த்தேன். அவளேதான். சொல் என்றேன். பெற்றோருக்கும்,அத்தைக்கும் சம்மதம். நாம் நாளை இரவு கிளம்ப வேண்டும் என்றாள். நானும் சரி , நான் பேருந்தில் பயணச்சீட்டு பதிவு எய்து விடுவதாய் சொல்லி அலைபேசியை துண்டித்தேன். கொஞ்சம் பதட்டமாகத்தான் இருந்தது. அதற்கு காரணம் இந்த சமூகம் ஆணும் பெண்ணும் அண்ணன் தங்கையாய் இருந்தால் கூட பயணங்களின் போது தவறான பார்வையை தான் பொதுப்புத்தியில் முன்வைக்கும். அப்போது இணைய வேகம் மிகவும் குறைவாக இருந்ததால் மறுநாள் காலையில் பயணச்சீட்டு பதிவு செய்து கொள்ளலாம் என்று தூங்கி விட்டேன். சனிக்கிழமை அலுவலக விடுப்பு நாள் என்பதால் எட்டு மணிக்கு மேல் தான் எழுந்தேன். காலையில் நண்பனோடு சேர்ந்து சமைத்து சாப்பிட்ட பிறகு தான் பயணச்சீட்டு பதிவு செய்ய வேண்டும் என்ற நினைவு வந்தது. இணைய வேகம் குறைவாக இருந்ததால் என்னவோ பணம் மட்டும் குறைந்து விட்டு பயணச்சீட்டு பதிவாகவில்லை. வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு கேட்டதற்கு பணம் பதினைந்து நாட்களுக்குள் திரும்ப செலுத்தப்படும் என்றார்கள்.வங்கிக் கணக்கில் வேறு பணமில்லாமல் நண்பனிடமிருந்து வாங்கி பயணச்சீட்டை பதிவு செய்து முடித்தேன். அன்றுதான் ஆளுங்கட்சியின் இரண்டு பிரிவுகள் தமிழக அரசின் தலைமைக்குப் போட்டியிட்டு தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க சட்டமன்றத்தில் கூட்டம் கூட்டப்பட்டிருந்தது. அதனால் தமிழகம் முழுவதும் ஏதோ ஒரு விதமான பரபரப்புடன் தங்களுக்கு சாதகமான முடிவு எடுக்கப்படுமா என்று எதிர்பார்த்துக் காத்திருந்தது. நானோ திரு கு.சின்னப்ப முதலியார் எழுதிய "தாகம்" நாவலின் பாதி வரை பயணித்து முடித்திருந்தேன். அன்று அந்த தாகத்தை எப்படியேனும் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையோடு தொடர ஆரம்பித்தேன். இடையிடையே தொலைக்காட்சியையும் கவனிக்கத் தவறாமல் இல்லை. மதிய வேளையில் எதிர்க்கட்சிகளின் நியாயமான சட்டமன்ற அமளியால் தமிழகம் முழுதும் கொஞ்சம் பரபரப்பு அதிகமாகவே காணப்பட்டது. சில இடங்களில் பேருந்துகளின் மீது மர்ம நபர்கள் கல் வீசினார்கள் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதனிடையில் அவள் அலைபேசியில் அழைத்து இந்த செய்திகளை அவளது பெற்றோர் சொல்லி எங்களால் இங்கிருந்து பாதுகாப்பாக வர முடியுமா என்று கேட்டதாகக் கூறினாள். இந்தப் பயணம் மேற்கொள்ள முழுவதும் சம்மதம் இல்லாமல் இருந்த எனக்கு இந்தச் செய்தி காட்டைக் கொளுத்த ஒரு தீப்பெட்டியை காட்டுக்காரனே கையில் கொடுத்தது போல இந்தச் சந்தர்ப்பத்தை விட்டு விடக் கூடாது என்று தோன்றியது. அவளோ நான் பயணச்சீட்டு பதிவு செய்ததை கேட்டுத் தெரிந்து கொண்டு பணம் வீணாய் போகுமே என்று ஆதங்கத்தோடு பதில் சொன்னாள். நானோ அதை ரத்து செய்து கொள்ள முடியும் என்று கூறினேன். பின்பு அவளே நீ என்ன சொன்னாலும் சரி , உன்னுடைய முடிவே இறுதி என்றும் அதையே அவள் தன் பெற்றோரிடமும் சொல்லி விடுவதாகவும் சொன்னாள். நான் முடிந்த வரையில் இந்தப் பயணத்தை ரத்து செய்ய எதாவது செய்யலாமா வேண்டாமா என்று மட்டுமே யோசித்துக் கொண்டிருந்தேன். நண்பனிடம் கேட்டதற்கு சென்று வா என்றே சொன்னான். நண்பன் சுப்பிரமணியன் பல முறை என்னிடம் சொல்லி ஆதங்கப்படுகின்ற ஒரு விசயம் ஆண் தோழர்களைப் போலவே தன்னிடம் சண்டை போட்டுக் கொண்டு, தகவல்களில் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக பகிர்ந்து கொண்டு, தங்களது நலனில் அக்கறை காட்டும் பெண் தோழிகள் தன்னுடைய வாழ்வில் இல்லை என்பது தான். இது போன்று அனைத்தும் வாய்க்கப்பெற்ற நான் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி என்று உண்மையை முழுவதும் மறுக்க முடியாது. இவளும் கல்லூரியிலிருந்து தன்னை எங்கேயாவது வெளியே அழைத்துச் செல்லுமாறு பல முறை என்னிடம் கேட்டிருக்கிறாள். ஆனால் நானோ பயத்தால் எதாவது காரணம் சொல்லி இது வரை மறுத்து விட்டேன். ஆனால் இப்போது அந்த பயத்தை எப்படியோ வென்று கும்பகோணம் போகலாம் என்று அவளைத் தொடர்பு கொண்டு இறுதியாக சம்மதம் சொல்லி விட்டேன். உண்மையில் எனக்கும் அவளோடு எங்கேயாவது ஒரு நீண்ட பயணம் போக வேண்டும் என்று ஆசைதான்.அவள் தாம்பரம் சானடோரியம் இல் இருந்தாள். நான் கிரோம்பேட்டையில் இருந்தேன். எனவே எட்டு மணிக்கு கிரோம்பேட் வந்துவிடு என்று சொல்லி விட்டேன். நானும் கிரோம்பேட் பேருந்து நிலையத்திற்கு எட்டு மணிக்கெல்லாம் சென்று விட்டேன். அவள் வருவதற்கு எட்டு இருபது மணி ஆகி விட்டிருந்தது. கொஞ்சம் பதட்டத்தோடுதான் நின்றிருந்தேன். 8.35 மணிக்கு கோயம்பேடு செல்லும் பேருந்தில் ஏறினோம். நல்லவேளை ஏறியவுடன் ஆளுக்கு ஒரு இருக்கையில் அமர இடம் இருந்தது. நான் பயணச் சீட்டு எடுத்துக் கொள்வதாகச் சொல்லிவிட்டேன். அங்கிருந்து கோயம்பேடு சேரும் வரைக்கும் நாங்கள் ஒருமுறை கூட பார்த்துக்கொள்ளவில்லை. நான் எப்போதும் போல headphone அணிந்து இளையராஜாவின் இசையில் SPB மற்றும் ஜானகி குரலில் இசைக்கும் இன்னிசையில் லயித்து வேறொரு உலகில் பயணித்துக் கொண்டிருந்தேன். கோயம்பேட்டில் 9.35 மணிக்கு இறங்கினோம். நானோ 10.35 க்கு தான் கும்பகோணம் பேருந்தை பதிவு செய்திருந்தேன். பேருந்து ஐந்தாம் எண் நடைமேடையில் இருந்தது. வரும்போது தண்ணீர் பாட்டில் கொண்டு வராததால் ஒரு தண்ணீர் பாட்டில் வாங்கச் சொன்னாள். நானும் வாங்கிக் கொண்டு பேருந்து நிற்கும் இடத்திற்கு சென்றோம். சிறப்பு தினங்களில் ஒட்டப்படுவது போல BUS ID No ஒட்டப்படவில்லை. நானும் அவ்வாறு ஒட்டப்பட்டுத்தான் பேருந்து வரும் என்று வேறொரு கும்பகோணம் பேருந்தின் முன்பு உள்ள இருக்கையில் அமர்ந்திருந்தோம். எதாவது சாப்பிடுகிறாயா என்று கேட்டதற்கு தான் பயணத்தின் போது அதிகமாக சாப்பிடுவதில்லை என்று சொல்லி விட்டாள். பத்து மணி ஆகியும் பேருந்து வராததால் நான் இந்தப் பேருந்து நடத்துனரிடம் கேட்கலாம் என்று போய் கேட்டேன். அவரோ என்னை சிறிதும் கண்டு கொள்ளாமல் மற்றொருவரிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தார். நானும் பேசி முடிக்கட்டும் என்று சிறிது நேரம் நின்றிருந்தேன். அப்போது பேருந்தினுள் இருந்து ஒருவர் வெளியே வந்தார். அவரிடம் இதைப் பற்றி கேட்க அவர் பேருந்து புறப்படும் நேரம் பற்றிக் கேட்டார். நான் 10.35 என்று சொல்ல இது தான் அந்தப் பேருந்து என்று சொன்னார். BUS ID No பற்றி மற்றொரு நடத்துனர் இதெல்லாம் முக்கியமான நேரங்களில் தான் ஒட்டப்பட்டிருக்கும் மற்றபடி Route No பார்த்து தான் போக வேண்டும் என்று சொன்னார். சரி என்று நாங்களும் பேருந்தினுள் ஏறினோம். அவளை ஜன்னலோர இருக்கையில் அமரச் சொல்லி நான் உள்பக்கம் அமர்ந்தேன். ஆண்கள் திருமணத்திற்குப் பிறகு தங்களுக்கு மிகவும் பிடித்த பேருந்தின் ஜன்னலோர இருக்கையைக் கூட மனைவிக்காக விட்டுக்கொடுத்து விடுவார்கள் என்று ஒரு ஆணின் சிறப்பைப் பற்றி சொல்வது போல என்றோ முகப்புத்தகத்தில் படித்த நியாபகம். மனைவிக்கு மட்டும் அல்ல தோழிக்காகவும் விட்டுக் கொடுக்கலாம் என்று சொல்லி என்னுள் சிரித்துக் கொண்டேன்.அந்தப் பேருந்தில் ஒரு சில இருக்கைகள் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. அதனால் சில பேர் மட்டுமே வந்திருந்தனர். அவளோ வெளியே செல்வதாக சொல்லிச் சென்றாள். சிறிது நேரம் கழித்து வந்தவள் கையில் இரண்டு lollipop வாங்கி வந்தாள். எதோ சொல்லிவிட்டு அதில் ஒன்றை சாப்பிட ஆரம்பித்தாள். எனக்கோ எங்களை யாரோ கண்காணிப்பது போன்ற ஒரு உணர்வு . வலது பக்கம் திரும்பிப் பார்த்தேன். எங்களுக்கு வலது திசையில் ஒரு இருக்கையில் ஒரு அக்காவும் அவர்களுடைய ஒரு குழந்தையும் அதர்க்குப் பின்னால் அவர்களுடைய கணவரும் மற்றொரு குழந்தையும் இருந்தனர். அந்த அக்கா என்னையே விடாமல் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற ஒரு உணர்வு. அதை உறுதிப்படுத்திக் கொள்ள திரும்பி அவர்களை நேராகப் பார்த்தேன். உண்மையில் அவர் என்னை தான் பார்த்துக் கொண்டிருந்தார். ஏதோ பரிட்சயமானவரைப் பார்ப்பது போல பார்த்தார். எனக்கோ அவரது முகத்தை இதுவரையில் பார்த்த நியாபகம் இல்லை. சரி என்று விட்டு விட்டேன். மீண்டும் சில முறைகள் அவர் என்னை கவனிக்கின்றாரா என்பதை கவனித்தேன். அவரும் அடிக்கடி பார்த்துக் கொண்டு தான் இருந்தார். ஏதோ யோசனைக்குப் பிறகு அவர்கள் பற்றிய எண்ணங்களை மறந்து விட்டேன். பேருந்து சரியாக 10.35 க்கு புறப்பட்டது. நான் headphone ஐ கையில் வைத்திருந்தேன். அவள் திடீரென ஏதாவது பாடல் கேட்கலாம் என்று சொல்லி என் அனுமதிக்காக காத்திருக்காமல் வலது பக்க காதில் headphone இன் ஒரு முனையை மாற்றிக்கொண்டு எனக்கு ஒன்றை கொடுத்தாள். நானும் பாடல்களை வரிசையாக ஓட விட்டுக் கொண்டிருந்தேன். பொதுவாக என்னிடம் இளையராஜா பாடல்கள் தான் அதிக அளவில் இருக்கும். அவளுக்கோ அதில் பெரிய அளவுக்கு விருப்பம் இல்லை என்பதை சில பாடல்களிலேயே தெரிந்து கொண்டேன். "என்ன டா பாட்டு வெச்சுருக்க , புது பாட்டு ஏதும் இல்லையா " என்றபடி பாடல்களை மாற்றச் சொன்னாள். இந்த மாதிரி பாடல்கள் தான் என்னிடம் அதிகம் இருக்கும் என்று நான் பதிலளித்தேன். பிறகு என் கையில் இருந்து அலைபேசியை வாங்கி whats app இல் ஏதோ பார்த்தாள். பிறகு Contacts இல் ஏதோ அலைபேசி எண்களைத் தேடினாள். அவள் என்ன தேடுகிறாள் என்பதை நான் யூகித்திருந்தேன். உடனே அவள் என்னைப் பார்த்து "என்னடா போன்ல ஒரு பொண்ணு நம்பர் கூட இல்ல என்று வினவினாள்". உண்மையில் அதில் சில எண்கள் இருந்தன. அவை அனைத்தும் எங்களது வகுப்புத் தோழிகளின் எண்கள் என்று தெரிந்ததால் அதைப் பற்றி அவள் எதுவும் கேட்கவில்லை. நானோ "அப்படி யாராச்சும் இருந்தா தான நம்பர் இருக்குறதுக்கு" என்று நக்கலாக பதிலளித்தேன். "பரவாயில்ல இன்னும் நல்ல பையனா தான் இருக்க" என்றாள். எப்பொழுதும் போல சிரித்தேன். அவ்வளவு தான் அதைப்பற்றி நாங்கள் எதுவும் தொடரவில்லை. அடிக்கடி பாடல்களை மட்டும் மாற்றச் சொல்லியும் அவளுக்குப் பிடித்த பாடல் வந்தாள் வைக்கும்படியும் சொன்னாள். ஆனால் நான் பல முறை மாற்றும் போதும் அவள் எதுவும் சொல்லவில்லை. பேருந்து தாம்பரம் தாண்டவும் முழுவதும் நிரம்பி இருந்தது. பேருந்தின் வேகம் கொஞ்சம் கூடி இருந்தது. அனால் சாதாரண வேகத்தை விட குறைவாகத்தான் அப்போதும் இருந்தது. பேருந்து விளக்கை மட்டும் அடிக்கடி அணைப்பதும் எரிய விடுவதுமாக இருந்தார்கள். அவள் பையிலிருந்து இரண்டு மெல்லிய பெட்ஷீட்களை எடுத்து ஒன்றை எனக்குக் கொடுக்க வந்தாள். எனக்கு குளிரவில்லை என்று சொல்லி வேண்டாம் என்றேன். பிறகு அவள் ஒன்றை மாட்டும் போர்த்திக் கொண்டாள். ஏதோ வீட்டு சோப்பாவில் தூங்குவதைப்போல கால்களை மடக்கி அமர்ந்து தூங்குவதற்குத் தயாரானாள். பேருந்து ஆமையைப் போல நகர்வதாகத் தோன்றியது. சரியாக ஒரு மணிக்கு மேல் இருக்கும். எப்போதும் போல பேருந்து இரவு தேநீருக்காக எங்கோ ஒரு இடத்தில் நிறுத்தப்பட்டது என்று அறிந்து கொண்டேன். நான் பேருந்து பயணத்தில் எப்போதும் ஆசைப்பட்டுக் காத்துக் கொண்டிருக்கும் தருணம் எனக்கு மீண்டும் ஒரு முறை கிடைத்து விட்டது. நடு சாமத்தில் மனதுக்கு பிடித்த ஒரு கோப்பை தேநீரின் சுவைக்கு மேலும் சுவையூட்டும் இளையராஜாவின் கானங்கள் பின்னணியில் இசைக்க அவைகள் அனைத்தும் குருதியில் கலந்து குளிரில் நடுங்கும் உடலுக்குள் வெந்நீர் அருவி போல் பாயும் அந்தச் சில உணர்ச்சிமிகு நிமிடங்களைத் தவற விட யார் தான் விரும்புவார்கள். அவளும் தூக்கத்தில் இருந்து எழுந்து விட்டிருந்தாள். நான் ஆர்வத்தோடு "காபி குடிக்க போலாமா" என்றேன். எதோ யோசித்தவள் சரி என்றாள். இருவரும் பேருந்தில் இருந்து இறங்கினோம். பகலை விட அந்தக் கடையும், ஓட்டலும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. பேருந்தில் வருபவர்களை எழுப்புவதற்காக வழக்கத்துக்கு மாறாக அதிக சப்தத்துடன் பாடல்கள் இசைத்துக் கொண்டிருந்தன. எங்களுக்கு முன்னரே அங்கு ஐந்து அல்லது ஆறு பேருந்துகள் நின்றிருந்தன. டீ,காபி குடிப்பவர்கள் , புகை பிடிப்பவர்கள், சிறுநீர் கழிக்கச் செல்பவர்கள் , அப்போது தான் இரவு உணவை சாப்பிடுபவர்கள் என்று வித விதமாக மனிதர்கள் தென்பட்டனர். நான் சென்று இரண்டு காபி மட்டும் வாங்கிக் கொண்டேன். அவளும் வேறு எதுவும் வேண்டாம் என்றாள். நடுங்கும் குளிரில் மெல்லமாக ரசித்து அருந்திய காபியின் அமிர்தத் துளிகள் தொண்டையை நனைத்து வயிற்றில் இறங்கும் போது உடலில் ஏற்படும் ஒரு வகை வெப்ப மாற்றமும் , பின்னணியில் இசைத்த "சிங்கு சா சிங்கு சா பச்ச கலரு சிங்கு சா" பாடலும் என்னை என்னமோ செய்தன. காபியை முடித்து விட்டு பேருந்தில் ஏறும் போது "என்னடா பாடல் இது" என்று அங்கலாய்த்துக் கொண்டாள். நான் எப்போதும் போல சிரித்து விட்டு பேருந்தில் ஏறினேன். சில நிமிடங்களில் பேருந்தும் புறப்பட்டது. இருவரும் மீண்டும் பாடல் கேட்கத் துவங்கினோம். அவள் சிறிது நேரத்தில் தூங்கி விட்டிருந்தாள். எனக்கு வெகு நேரம் தூக்கம் வரவில்லை. பாட்டு கேட்டபடியே வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். எப்படியோ அதன் பிறகு சிறிது நேரத்தில் தூங்கிப் போனேன். திடீரென்று பேருந்து வேகத் தடை மேல் ஏறி இறங்கி குலுங்கி என் தூக்கத்தைக் கலைத்தது. அப்போதுதான் ஒரு விஷயம் புரிந்தது. உடல் முழுதும் எதோ ஐஸ் பெட்டியினுள் வைத்தது போன்று நடுங்கிக் கொண்டிருந்தது. கை விரல்களின் உணர்ச்சி வழக்கத்திற்கு மாறாக சற்று குறைவாக இருந்தது. கைகளை தேய்த்து கொஞ்சம் உடம்பை சூடுபடுத்திக் கொண்டேன். சிறிது நேரத்தில் அவளும் தூக்கத்தில் இருந்து எழுந்தாள். அவளுடைய அத்தை மூன்று மணிக்கே கும்பகோணம் வந்து விட்டிருந்ததாகவும் வேறு யாரும் வரவில்லை என்றும் சொன்னாள். இப்போது மணி ஐந்தைத் தாண்டியிருந்தது. Google Maps ஐ பார்த்து ஆறு மணிக்கு கும்பகோணம் சென்று விடுவோம் என்று உறுதிபடுத்திக் கொண்டேன். அதேபோல் சரியாக 6:05 க்கு கும்பகோணத்தில் இறங்கினோம். இதமான பனியும், உடலை நடுங்க வைக்கும் குளிரும் , அதிகாலை பேருந்து நிலயத்திற்கே உண்டான பரபரப்பும் எங்களை இனிதே வரவேற்றன. உண்மையில் எனக்கு கும்பகோணத்தைப் பற்றி அதிகம் தெரியாது. கோயில்கள் அதிகம் உள்ள ஓர் ஊர் என்று மட்டுமே தெரியும். அவளின் அத்தை எங்கே உள்ளார் என்று கண்டுபிடிக்கவே பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகி விட்டது. "திருமணஞ்சேரி" கோவிலுக்கு எப்படி போவது என்று பேருந்து நடத்துனரிடம் வழி கேட்டோம். நாங்கள் இங்கே வருவதற்கு முன்பே அவளது அத்தை பேருந்து பற்றிய சில விவரங்களை தெரிந்து வைத்திருந்தார்.  எப்படியோ வழி கேட்டு குற்றாலம் போய் அங்கிருந்து ஆட்டோவில் போக வேண்டும் என்று உறுதிபடுத்திக் கொண்டு குற்றாலம் போகும் பேருந்தில் ஏறி அமர்ந்தோம். பேருந்தும் உடனே புறப்பட்டதில் ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. பேருந்து நகரத்தை விட்டு விலக விலக குளிரின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே சென்றது. எனது சொந்த ஊர் சேலம் மாவட்டம் .சேலம் மாவட்டம் தான் என்றாலும் எனது ஊர் இருந்த இடம் சேலம் , நாமக்கல், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்கள் இணையும் எல்லையில்தான். நான் பள்ளி செல்லும் காலங்களில் சாலையின் இரு பக்கங்களிலும் புளிய மரங்களோ அல்லது வேறு வகை மரங்களோ அடர்ந்து நின்று வருபவர்களை இரு கரம் கூப்பி வரவேற்பது போல் ரம்மியமான தோற்றத்துடன் கம்பீரமாக நின்றிருக்கும். ஆனால் சில காலத்திற்குப் பிறகு நகரமயமாக்கல் என்கின்ற பெயரில் சாலையோரம் இருந்த அனைத்து மரங்களும் உயிரோடு வெட்டி தீக்கிரையாக்கப்பட்டன. அன்று முதல் இது நாள் வரையில் அது போன்று நெடுந்தூரம் சாலையோரங்களில் பெரிய மரங்கள் இருந்து நான் பார்த்ததில்லை. அதற்கு இயற்கைப் பிரதேசங்களுக்கு நான் இதுநாள் வரையில் பயணம் மேற்கொள்ளாமல் இருந்தது கூட காரணமாக இருக்கலாம். ஆனால் இந்தப் பேருந்து பயணத்தில் நான் கண்ட காட்சி அதைப்போன்று வெறுமையாக இருக்கவில்லை. இங்கே சாலையின் இரு ஓரங்களிலும் நன்கு வளர்ந்த பெரிய மரங்களின் பக்கவாட்டுக் கிளைகள் ஒன்று சேர்ந்து என்னை பல வருடங்களுக்கு முன்பு நான் கண்ட அதே புன்சிரிப்போடு மீண்டும் வரவேற்றன. பல நாட்கள் பிரிந்த தாயைக் கண்டதும் கதறி அவளை அன்போடு அணைக்க ஓடும் குழந்தையைப் போல எனது முக பாவனைகள் மாறியிருக்க வேண்டும். அனைத்து மரங்களையும் ஆசையோடும் , ஏக்கத்தோடும் பார்த்துக்கொண்டே நீண்டது எங்களது பேருந்து பயணம். இது இப்படி இருக்கையில் சிறிது தூரம் சென்றதும் சாலையின் இடதுபுரத்துக் காட்டில் நான் கண்ட காட்சி என்னை திக்குமுக்காடச் செய்து விட்டது. பழைய படங்களின் சொர்க்கலோக காட்சிகளில் நடனமாட ரம்பையும்,ஊர்வசியும் வரும்போது கால் முட்டி வரையிலும் ஒரு வகையான பனி மூட்டம் செயற்க்கையாக உருவாக்கப்பட்டிருக்கும். அதைப் போலவே இங்கே இலகுவான பனி மூட்டம் களையும் வேலையில் காட்டின் பாதுகாப்பிற்காக போடப்பட்ட முள்வேலி கூட மிகவும் மங்களாகவே தெரிந்தன. இதைப் போலவே சாலையின் இரு புறங்களிலும் ஆங்காங்கே இயற்கை அன்னையின் நடனம் அரங்கேறியது. இது இவ்வாறு இருக்க திடீரென்று ஒரு செம்மறி ஆட்டுக்குட்டி பேருந்தின் முன்புறம் பாய்ந்தது. ஓட்டுநர் சுதாரித்துக் கொண்டு வேகத்தைக் குறைக்க ஆட்டுக்குட்டியோ நீ வேண்டுமானால் மெதுவாய்ப் போ என்பதுபோல் தனது இரு காதுகளையும் ஆட்டிக்கொண்டு துள்ளி குதித்து ஓடியது. மனது ஏதோ கற்பனையில் மிதந்து கொண்டிருக்க சரியாக நாற்பது நிமிடத்தில் குற்றாலம் சென்றடைந்தோம். பேருந்தில் இருந்து இறங்கியதும் பல கார் ஓட்டுனர்கள் எங்களை கோவிலுக்குக் கூட்டிச் செல்வதாகவும் கட்டணம் நூற்றைம்பது ருபாய் எனவும் அழைத்தார்கள். இவளின் அத்தையோ அதெல்லாம் வேண்டாம் நடந்தே போகலாம் என்று கூட்டிச் சென்றார்கள். கொஞ்ச தூரம் நடந்த பிறகு நான் Google Maps இல் பாதை மாறாமல் இருக்க வேண்டி பார்த்தேன். அதில் குற்றாலத்திலிருந்து திருமணச்சேரி ஐந்து கிலோமீட்டர் என்று பாதை காட்டப்பட்டது. இதை அவர்களிடம் சொன்னபோது இவள் அத்தையைப் பார்த்து முறைத்தாள். எங்களுடன் இன்னொரு குடும்பமும் நடந்து வந்து கொண்டிருந்தது. சரி ஆட்டோவில் போகலாம் என்று முடிவெடுத்து எதிரில் வந்த ஆட்டோவை திருப்பி ஏறிக்கொண்டோம். மொத்தம் ஆறு பேர் என்பதால் ஆட்டோவில் இடமில்லை. நானோ பின்னால் உள்ள கம்பியின் மீது அமர்ந்து கால் வலுவில் தான் உடல் எடை முழுவதையும் தாங்கிக் கொண்டிருந்தேன். முடிந்த வரையில் என்னுடைய கால் வலிப்பதாக வெளியே காட்டிக்கொள்ளவில்லை. அதற்குக் காரணம் எங்களோடு ஆட்டோவில் பயணம் செய்த அந்தக் குடும்பத்தில் என்னுடைய வயது மதிக்கத்தக்க ஒரு குமரிப் பெண்ணும் இருந்தால் என்பது கூட இருக்கலாம். சாலை முழுதும் மேடும் பள்ளமுமாக இருந்ததால் ஆட்டோ ஏறி இறங்கிச் சென்றது. என்னுடைய காலோ இதற்கு மேல் பாரத்தை தாங்க முடியாது என்பது போல ஆடத் தொடங்கியது. நானும் முடிந்த வரையில் உடம்பை நகர்த்தி உடல் எடையை சமன் செய்து கொள்ள முயன்று கொண்டிருந்தேன். இதைப் பார்த்த அந்தக் குமரிப் பெண்ணின் முகத்தில் ஒரு சிறிய புன்னகை பூத்தது. நானோ முடிந்த வரையில் கோயில் போகும் வரை சமாளிப்பதா இல்லை வேறு ஏதேனும் செய்ய முடியுமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அதுவரை நான் மேற்கொண்ட ஆட்டோ பயணங்களிலேயே அதுதான் மிகவும் கொடுமையான பயணமாக இருந்திருக்க வேண்டும். எனது காலோ சகிப்புத் தன்மையின் எல்லையில் நின்று போராடிக் கொண்டிருந்தது. என்னை அறியாமலேயே ஆட்டோவை நிறுத்தத் சொல்லிவிட்டேன். இறங்கி காலை உதறிக் கொண்டு முன்பக்க இருக்கையில் போய் ஓட்டுனரோடு சேர்ந்து அமர்ந்து கொண்டேன். எப்படியோ ஒரு வழியாக கோயிலுக்குப் போய் சேர்ந்தோம். ஆட்டோ ஓட்டுனரிடம் எப்படியோ பேசி இறுதியாக 120 ரூபாயை கொடுத்தார்கள். ஆட்டோவில் இருந்து இறங்கியதுமே கோவிலின் முன்புறம் ஒரு பூக்கடையில் வியாபாரம் செய்துகொண்டிருந்த சிலர் பூவை வாங்கிக் கொண்டுதான் உள்ளே செல்ல வேண்டும் என்றும் யாரும் வாங்காமல் செல்வதில்லை என்றும் அனைவரையும் வற்புறுத்தினார்கள். குளித்துவிட்டு வந்து வாங்கிக் கொள்வதாக சொல்லிவிட்டு இவளும், அத்தையும் குளிக்கச் சென்றனர். நான் அந்தப் பூக்கடை பக்கத்திலேயே அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். குளிக்கச் சென்ற சிறிது நேரத்தில் இவள் எனக்கு போன் செய்தாள். என்னவென்று கேட்க இங்கே ஆண்களும் பல் துலக்கி சுத்தப்படுத்திக் கொள்ளலாம் என்றும் என்னையும் அங்கே வரும்படியும் கூறினாள். எனக்கோ பல் துலக்கக் கூட நாட்டமில்லாமல் வரவில்லை என்று சொன்னேன். ஏதோ திட்டிவிட்டு அலைபேசியை துண்டித்தாள். இங்கே பூ வியாபாரமோ மும்மரமாக நடந்து கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் இவளும் , இவளது அத்தையும் குளித்துவிட்டு வந்தார்கள். சரி கோவிலுக்கு போகலாம் என்று ஒரு பேச்சுக்காக சொன்னாள். நான் கடவுளை வெறும் கல்லாக பாவித்து அதை வணங்குவதும் அது போன்ற மூடநம்பிக்கை துளியும் இல்லாதவன் என்றும் அவளுக்கு நன்றாகவே தெரியும். நான் வரவில்லை என்றேன். அவளது அத்தையும் இவ்வளவு தூரம் வந்துவிட்டு கோவிலுக்குள் வரவில்லை என்றாள் எப்படி என்று அழைத்தார்கள். நானோ குளிக்கவில்லை என்று ஏதோ காரணம் சொல்லி அவர்களின் உடைமைகளை வாங்கிக் கொண்டு அவர்களை உள்ளே அனுப்பி வைத்துவிட்டு அந்தப் பூக்கடை பக்கத்தில் உள்ள ஒரு திண்ணையில் அமர்ந்தேன். கோவிலுக்கு அர்ச்சனை சீட்டும், பூவும் நூறு ரூபாய்க்கு கொடுப்பதற்கான உரிமையாளரின் கடைக்கு முன்பாகவே இவர்களது பூக்கடை இருந்தது. நேரம் போகப் போக கோவிலுக்கு வருபவர்களின் கூட்டம் அதிகமாகிக் கொண்டே சென்றது. இவர்களோ வரும் அனைவரிடமும் தங்களது கைவரிசையைக் காட்டிக் கொண்டிருந்தனர். சில சமயம் பக்கத்துக் கடைக்காரர்களும் இவர்களுக்கு உதவி செய்தனர். கோவிலுக்கு வரும் சிலரோ தாங்கள் உள்ளே சென்று வாங்கிக் கொள்வதாக சொல்லிச் சென்றனர். புதிதாக வருபவர்களிடம் சில பேரிடம் பணிந்தும் சில பேரிடம் கடவுளின் பெயரால் மிரட்டும் சாயலிலும் பேசி வியாபாரம் நடத்தி வந்தனர்.அர்ச்சனைச் சீட்டு இல்லாமல் பூ விற்பவரிடம் ஏமாந்து பணத்தை பறிகொடுக்க வேண்டாம் என்று கோவில் நிர்வாகம் வைத்திருந்த பெரிய பலகையின் முன்பு நின்றுதான் இவர்களின் இந்த சித்து விளையாட்டு அரங்கேறியதும், அதைக் கூட கவனிக்காமல் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடவுளின் தரிசனத்துக்காக என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்பது போல ஒரு கேள்வி கூட கேட்க்காமல் ஒரு முழ பூவை நூறு ருபாய் கொடுத்து வாங்கிச் சென்றதும் தான் "ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவனுக்குக் கொண்டாட்டம்" என்னும் உண்மையை மீண்டும் ஒரு முறை என் காதில் உறக்கச் சொல்லியது. கோவிலில் பொதுவாக பூசை சில நேர இடைவெளி விட்டு விட்டு நடக்கும் என்று அங்குள்ள ஒரு கடைக்காரரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். இவர்கள் பூசை முடிந்து வெளியே வர ஒன்பதரை மணி ஆகியிருந்தது. இவர்கள் வந்ததும் சரி சாப்பிடலாம் என்றேன். பல் கூட துலக்காமல் சாப்பிடப் போகிறாயா என்று கடிந்து கொண்டாள். அதற்க்கென்ன துலக்கிக் கொள்ளலாம் என்று பக்கத்தில் இருந்த கடைக்குச் சென்றோம். நான் எப்போதும் போல கை கழுவி வாய் கொப்பளித்து விட்டு சாப்பிட அமர்ந்தேன். சாப்பிட்டு விட்டு காரில் குற்றாலம் சென்று விடுவதென முடிவெடுத்த்தோம். கார் ஓட்டுநர் ஒரு ஆளுக்கு இருபது ருபாய் என்றும் மொத்தம் ஆறு பேர் வந்தால் தான் போக முடியும் என்று சொன்னார். சரி என்று நாங்கள் மூவரும் ஏறி அமர்ந்தோம். காருக்குப் பக்கத்தில் ஒரு பெண் வருவதா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தாள். இவளின் அத்தையோ பேருந்தோ பதினோரு மணிக்குத்தான் என்றும் இப்போதே போனால் விரைவாக போய் விடலாம் என்றும் கரிசனமாக அவர்களை வரச் சொன்னார்கள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த இவள் நீயா இப்புடி பேசற என்று அத்தையை பார்த்துக் கேட்டாள். அவர்களோ நாம் போகவேண்டும் அல்லவா என்று காரியத்தோடு பதில் சொன்னார்கள். அவர்கள் மூன்று பேர் வந்ததும் கார் புறப்பட்டது. கார் ஓட்டுனரோ சில இரயில் வண்டிகளின் விவரங்களைப் பற்றியும், முந்தைய நாள் நடந்த அரசியல் சமாச்சரம் பற்றியும் போகும் வழியில் பேசிக் கொண்டு வந்தார். ஒரு வழியாக பத்து மணிக்கெல்லாம் குற்றாலம் வந்து விட்டோம். காரிலிருந்து இறங்கிய உடனேயே கும்பகோணம் செல்லும் பேருந்து புறப்படத் தயாராக இருந்தது. நாங்கள் ஏறிய உடன் பேருந்தும் புறப்பட்டது. பத்தே முக்கால் மணிக்கு முன்பாகவே கும்பகோணம் வந்தாகி விட்டது. அங்கே இறங்கியதும் நாங்கள் விடைபெறுகிறோம் என்றும், அவர்களைப் பார்த்து செல்லுங்கள் என்றும் சொல்லிவிட்டு இவளும் நானும் விடைபெற்றோம். இப்போதும் சென்னை செல்லும் பேருந்து புறப்படத் தயாராக நின்றது. நல்ல வேலையாக இருவர் அமரக்கூடிய ஒரு இருக்கை பின் பகுதியில் இன்னும் நிரம்பவில்லை. இதிலேயே போகலாம் என்று ஏறி அமர்ந்தோம். பேருந்தும் பதினோரு மணிக்கு புறப்பட்டது. எப்படியும் போக ஆறு மணி ஆகிவிடும் என்று சலித்துக் கொண்டாள். பேருந்து புறப்பட்ட உடனேயே ஆளுக்கொரு காதில் Headphone ஐ மாற்றிக் கொண்டு பாட்டு கேட்க ஆரம்பித்து விட்டோம். பேருந்தோ ஆமையைப் போல மெதுவாக ஊர்ந்து கொண்டு சென்றது. நானோ கொஞ்ச நேரம் தூங்குவதும் கொஞ்ச நேரம் விழித்திருப்பதுமாக அமர்ந்திருந்தேன். அவளோ இரண்டு மூன்று முறை தூங்கித் தூங்கி என் தோளின் மேல் விழுந்து எழுந்து மீண்டும் தூங்க ஆரம்பித்தாள். நடத்துனரோ தாம்பரம் வழியாக போக மாட்டோம் என்றும் பெருங்களத்தூரில் இறங்கிச் சென்றுவிடுங்கள் என்று சொல்லிச் சென்றார். இப்படி ஒரு வழியாக விழுப்புரம் வந்து சேர்ந்தோம். விழுப்புரத்தில் ஒரு ஆசிரியரும் சுமார் முப்பது மாணவ மாணவிகளும் எங்களுடன் பேருந்து பயணத்தில் இணைந்து கொண்டனர். ஞாயிற்றுக்கிழமை அதுவுமா இவர்கள் எங்கே சென்று வருகிறார்கள் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். சில பேர் கருப்பு நிற சட்டை அணிந்திருப்பதைப் பார்த்து NSS ஆக இருக்கலாம் என்று யூகித்திருந்தேன். பேருந்தில் ஏறிய உடனேயே ஆசிரியரை கிண்டலடித்துக் கொண்டும் , மற்ற மாணவர்களை கிண்டலடித்துக் கொண்டும் அவர்களின் உரையாடல் நீண்டது. இவளும் தூக்கத்தில் இருந்து விழித்திருந்தாள். மாணவர்களின் பேச்சைக் கேட்டு இவளும் அடிக்கடி சிரித்துக் கொண்டுதான் இருந்தாள். ஒருமுறை என்னிடம் வந்து "இவனுங்க செம வாய் பேசுறானுங்க" என்று மெதுவாகச் சொன்னாள். எனக்கு என்னமோ உள்ளூர கொஞ்சம் பதட்டமாகத்தான் இருந்தது. எங்கே இவர்கள் எங்களை ஓட்டுவார்களோ என்று. நல்ல வேலையாக கடைசி வரை அப்படி எதுவும் நடக்கவில்லை. பேருந்தின் முன்பக்கம் என் வயது மதிக்கத் தக்க ஒருவன் இவளை அடிக்கடி திரும்பி பார்த்துக் கொண்டிருந்தான். எனக்கு கொஞ்சம் கோபமாகத்தான் வந்தது. நான் மட்டும் என்ன யோக்கியமா என்ற கேள்வியும் கூடவே வந்தது. எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து விட்டேன். சிறிது நேரத்தில் மாணவர்களும் பேருந்தை விட்டு இறங்கிச் சென்றார்கள். பேருந்தின் பின்பகுதி முழுக்க மீண்டும் வெறுமையானது. ஒரு வழியாக ஐந்தரை மணிக்கு பெருங்களத்தூரில் இறங்கினோம். உடம்பெல்லாம் யாரோ அடித்துப் போட்டதுபோல் வலி. இங்கிருந்து ஆட்டோவிலேயே சென்று விடலாம் என்று முடிவெடுத்து ஆட்டோவில் ஏறிக் கொண்டோம். ஆட்டோக்காரர் சானடோரியம் வரை ஒரு ஆளுக்கு இருபது ருபாய் என்றும் கிரோம்பேட் வரை ஒரு ஆளுக்கு முப்பது ருபாய் என்றும் சொன்னார். உடல் அசதியினால் ரயிலில் போகாமல் வேறு வழியில்லாமல் ஆட்டோவிலேயே சென்றோம். இந்த வகையான ஆட்டோ கட்டணம் மிக மிக அதிகம் என்று தெரிந்தும் நான் ஏதும் பேசாமல் தான் இருந்தேன். அவள் "ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் டா" என்று சொல்லிவிட்டு சானடோரியம் இல் இறங்கி கொண்டு பார்த்து போ என்று சொல்லி ஒரு பார்வை பார்த்துவிட்டு நகர்ந்தாள். நானும் கிரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் இறங்கி ரூம் ஐ நோக்கி நடக்க ஆரம்பித்தேன். இதுவரை நான் கண்ட வரையில் தன்னுடைய பிள்ளையின் நலன் கருதியும் சில இடங்களில் பெண்களுக்கு நடக்கும் கொடூரங்களை நேரில் பார்த்தும் ,படித்தும் அல்லது பிறர் சொல்லக் கேட்டும் வெளியில் குறிப்பாக சென்னை போன்ற பெரிய நகரங்களுக்கு கிராமத்திலிருந்து வேலைக்கு அனுப்பும் பெற்றோர்கள் மிகக் குறைவாகவே உள்ளனர். இது போன்ற சூழ்நிலையில் ஒரு முறை மட்டுமே என்னை நேரில் பார்த்திருந்தும் கூட தன் பிள்ளை யாரோ ஒருவரைப் பற்றி அவள் சொல்வதை முழுவதும் அப்படியே நம்பி அதுவும் இரவில் நீ அவனைக் கூட்டிக்கொண்டு பாதுகாப்பாக பயணம் செய் என்கின்ற அவர்களின் அந்த வார்த்தை அவர்கள் தன் பிள்ளையின் மேல் வைத்துள்ள நம்பிக்கையையும் இந்த சமூகத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையையும் அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றன. பசியின் மயக்கத்தால் நடந்து வந்து வழக்கமாக காபி குடிக்கும் கடையில் ஒரு காபி குடித்துவிட்டு ரூம் ஐ நோக்கி நடந்து கொண்டிருந்தேன். உயிர் பிரியும் கடைசி தருவாயில் இருந்த எனது அலைபேசி அலறித்துடித்தது. நான் எடுத்து காதில் வைக்கவும் "நான் ரூம்க்கு போய்ட்டேன் , நீ போய்ட்டியாடா" என்று பாசமும் , பசியும் கலந்த குரலில் பரிவோடு கேட்டாள் எனது அன்புத் தோழி ராஜி என்கின்ற ராஜேஸ்வரி.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.