இன்றைய பொழுதும் விடிந்தது. கல்யாணம் என்னும் சந்தையில் நான் இன்னும் விலை போகவில்லை. ஆகையால் எப்போதும் போல் பெண் பார்க்கும் படலத்திற்காக அன்றும் அலங்கரிக்கப்பட்டேன். ஆனால் எங்கள் வழக்கத்தில் பெண் அல்ல ஆண் தான் வரதட்சணை கொடுத்தாக வேண்டும்.. இருந்தாலும் பெண்ணாகி போனதால் சமுதாயத்தின் படி , நானே தலை குனிந்தபடி நின்றேன் ,வெட்கம் என்னும் காரணத்தோடு.

அன்றும் வந்தார்கள். “அப்பா புடிச்சுருக்கு”.. இந்த வார்த்தையைக் கேட்டதும், என் தலை அனிச்சையாய் உயர , அவன் கைகள் எனதருகில் இருந்தவளை காட்டியதைக் கண்டு அதிர்ந்தேன். இருவரும் ஒரே முகச்சாயல். இருந்தாலும் நிறம் வேறு .அவளது சிகப்பு நிறம் முன் என் கருப்பு நிறம் தோற்றுப் போக. என் மனதில் பிறந்த சந்தோஷ அலை கரை கடக்கும் முன் அன்றும் அடங்கிப் போனது.

கடை வாசல் பொம்மைப் போல நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு நாள் தான் அது நடந்தது.

“சிகப்பைத்தேடி வந்தீங்களா? சிகப்பு இல்லையே ,கருப்பு தான் இருக்கு”, எங்கள் வீட்டிலிருந்து சொன்னவுடன், பார்க்க வந்த அவன் அப்பா முகம் சுளித்தார்.

”பரவால்லைப்பா. எனக்கு கருப்பு புடிச்சுருக்கு” – அவனின் குரல் முதல் முறை என் காதில் விழுந்தது. அப்பாவின் சம்மதம் பெற்றதும் இருவீட்டாரும் அடுத்தக்கட்ட காரியங்களைப் பேசி ஒரு முடிவுக்கு வந்தனர். நானும் விலை போனேன்....

செயினில் தலைகீழாய்த் தொங்கவிடப்பட்டிருந்த நான் இறக்கிவிடப்பட்டு அலங்கரிக்கப்பட்டேன். பெடல் கவர் ,புது ரிம் , சீட் கவர், சைடு ஸ்டாண்ட் ,ஸ்டைலான கண்ணாடி , புது பெல் என பெண் வீட்டு சீதனம் போடப்பட்டு , புதுப்பொலிவுடன் புகுந்த வீட்டுக்கு தயார் ஆகும் ஒரு சாதாரண சைக்கிள் சாதிப் பெண் தான் நான்.

அடையாளம் இல்லாமல் இருந்த எனக்கு முகவரி தந்தவன் அவன். இனி அவனோடு தான் என் பயணம் என்று , பூவோடும் பொட்டோடும் அவனுடன் சென்றேன். அவனது வாழ்கையில் கிடைத்த முதல் பெரிய பரிசாய் என்னைக் கொண்டாடினான். புகுந்த வீட்டுக்குள் எனது வலது காலான முன் டயரை எடுத்து வைக்க , “ இத ஏன்டா ,உள்ள கொண்டு வர , வாசல்ல வை போதும். உள்ள வந்தா வீடு முழுக்க டயர் மண்ணாகும்” அவனது அம்மாவின் குரல் மாமியாரை எனக்கு முதல் முறை அறிமுகம் செய்தது. புதிதாய் வந்த நான் அவளது மகனைச் சொந்தம் கொண்டாட விரும்பவில்லை போல.அவளும் பெண் தானே..

வாசல் சங்கிலியில் கட்டி இருந்த நாய் என்னைப் பார்த்துச் சிரித்தது. என் பிறந்த வீடான சைக்கிள் கடையில், சுதந்திரம் அறியாமல் கட்டப்பட்டே வளர்க்கப்பட்டது என் நினைவிற்கு வந்தது. இங்கும் இதே தான் என் நிலைமை என தலை எழுத்தை நான் நொந்துக்கொள்ள, “ அம்மா ப்ளீஸ் மா , மண் ஆகாம நான் பாத்துக்கறேன் ,மண் ஆச்சுனா நான் சுத்தம்பண்றேன்மா “ எனக்காக என்னவன் கெஞ்சிச் சம்மதம் வாங்கினான். சில் சில் என்ற சத்தத்தோடு நாயை நக்கலாய்ப் பார்த்தபடி ,புதுமருமகளாக நான் வீட்டினில் அடி எடுத்து வைத்தேன்.

அவனால் முதல் சுதந்திர காற்றை சுவாசிக்கத் துவங்கினேன். அவனோடு இருக்கையில் கல்லும் முள்ளும் வலிக்கவில்லை. அவனும் சுமையாய் இல்லை. காற்றில் சுதந்திரமும் ,மனதில் காதலும் தான் காரணம். உலகின் அழகை முதல் முறை என் டைனமோ கண்களால் கண்டு ரசித்தான. பிறந்த பயனை அடைந்த எண்ணத்தில். என் இரு டயர்களும் சந்தோசத்தில் காற்றில் மிதந்தன.

“புது சைக்கிள், என்னோடது எப்படி?” அனைவரிடமும் என்னை அறிமுகப்படுத்தினான்.

“என்னடா கருப்பு கலர் வாங்கிட்டு வந்துருக்க? பாரு! என்னோட சைக்கிள் சிகப்பு” மீண்டும் நிறத்தின் பேச்சு துவங்க, என்னவன் மனம் மாறிவிடுமோ என்ற அச்சம் என் சைக்கிள் செயினை இறுக்கியது.

“என் சைக்கிள் தான் செம,வேணும்னா ரேஸ் விடுவோமா” மீண்டும் எனக்காக அவனின் குரல். அவனுக்காக என்னை நிருபிக்க வேண்டிய முதல் தருணம் வாழ்வில். இறுக்கமான ஹாண்டில் பாரோடு,கரடு முரடான பாதையில் அவனுக்காக வசதியான வாழ்கை விட்டு ஓட தொடங்கினேன், கணவனுக்காக வாழ்கையை மாற்றி அமைத்துக்கொள்ளும் சாதாரண பெண்ணைப்போல்.. முதலல் முயற்சியில் வெற்றியும் கொண்டேன்.

அவன் என்னை விட்டு விலகவில்லை ,காலை முதல் இரவு வரை, புது பொண்டாட்டி அல்லவா, என்னையே சுற்றி வந்தான். நானும் அவன் நிழலாய் அவனை விட்டுப் பிரியவில்லை. அவன் குடையோடு இருக்க, நான் மழையில் நனைந்தேன் ,அவன் நிழலில் இருக்க, நான் வெயிலில் நின்றேன். விளைவு, என் ஸ்ப்ரே பையிண்டிங் கலரும் வெளுக்கத் தொடங்கியது ,டயர் பஞ்சர்கள் ஆனது, உடல் அழகும் குறைந்தது ,ஆனால் மனதில் உறுதியோடு அவனுடைய கனவை நான் சுமந்தேன்.

“அப்பா! எவனாச்சும் இன்னும் இதை வச்சுருப்பானா? என் கூட உள்ளவன் எல்லாம் பைக்ல போறான் ,நான் மட்டும் இத கட்டிட்டு அழறேன்”. அவனுக்காகக் களம்பிக்கொண்டிருந்த என் காதில் அவன் வார்த்தைகள் விழுந்தும், விழாதவாறு நின்ற என்னை எட்டி உதைத்து விட்டு சென்றான்.அன்று தொடங்கியது ,எங்களது பிரிவுக்கான தொடக்கப்புள்ளி. பிடிக்காத பொண்டாட்டி கால் பட்டால் குற்றம் கைப்பட்டால் குற்றம் என்பது மெய். என்னுடைய சிறு சிறு குறைகள் பெரிதாகப்பட்டன. ” அப்பா அடிக்கடி பஞ்சர் ஆகுது ,சைக்கிள் செயின் வேற அவுந்துக்குது, சனியன்” அவன் வார்த்தைகளும், அவன் அடி உதையும் கூட எனக்கு வலிக்கவில்லை ,ஆனால் அவள் வருகை தான் என்னைத் திருப்பிப்போட்டது.

ஏதோ ஒரு பெரிய குடும்பத்துப்ப் பெண் ஒருத்தி ,என் சக்காளத்தியாய் கம்பீரமாய் என் முன் நின்றிருந்தாள். பெயர் கூட புதுசாய் இருந்தது பல்சர். என்னால் எவ்வளவு முயன்றாலும் அவளோடு அழகிலும்,கம்பீரத்திலும் போட்டி போட முடியாது என்பது என் மூளைக்குத் தெரிந்தும் மனசு ஏற்க மறுத்தது. பஞ்சர் ஆன டயரோடு நான் வெளியேற்றப்பட்டேன். வாசலில் இருந்த நாய் இப்போது என்னைப் பார்த்துச் சிரித்தது. ஏன்? என்னவன் பல்சரோடு சோடியாய் போவதைக் கண்டா, இல்லை பிடிக்கவில்லை என்ற ஒரே காரணத்தால் ஒரு ஆணால் வாழாவெட்டியான என் நிலைமையைக் கண்டா, இதயம் வலித்தது, எண்ணெய் ஊற்றக் கூட ஆள் இல்லை. உனக்கும் நாளை இதே நிலைமை தான் என்று சிரித்துக் கொண்டேன் வசதியாய் மட்டும் வாழ தெரிந்த பல்சரைப் பார்த்து.

.”டேய் எடத்த அடைச்சுட்டு இருக்குற உன் சைக்கிளை பக்கத்து சைக்கிள் கடைல கொடுத்துறலாம்” வாழாவெட்டியாய் இருக்கும் என்னை அனுப்ப என் மாமியார் தயார் ஆக ,என்னவனும் தடுக்கவில்லை. இளமையும் , கொண்டு வந்த சீதனமும் காலி ஆன பின், என்னால் அவர்களுக்கு இனி பலன் ஏதும் இல்லை. வடிவும் வாழ்கையும் இழந்து மீண்டும் பிறந்த வீடான சைக்கிள் கடைக்கே வந்து சேர்ந்தேன்.

“இதை யார் தலையிலயாவது திரும்பத் தள்ளிவிடனும்” என்றபடி என் பிறந்த வீட்டு சொந்தங்களான கடைக்காரன், மீண்டும் என்னைப் புதுப்பித்தான் மறுமணத்திற்காக. வேறு எங்கவாது சுதந்திரமாக போய் எனக்கான வாழ்க்கையை நானே வாழ நினைத்தேன் . ஆனால் என் கால்கள் இப்பவும் கட்டப்பட்டு இருந்தன. பொழுதுகள் ஓட மீண்டும் அலங்ககரிக்கபட்டு வாசலில் நிறுத்திவைக்கப்பட்டேன்.

“ அப்பா, எனக்கு இந்த சைக்கிள் புடிச்சுருக்கு”,இந்த குரலைக் கேட்டதும் இந்த முறையும் தலைக் குனிந்தேன் சராசரி மனிதியாக , வெட்கத்தில் அல்ல. வருத்தத்தில்....


விஜேtamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.