சந்திரிகா அந்தி மாலை வேலையில் அவள் ஆருயிர் காதலனுக்காக பூங்காவில் காத்திருந்தாள். அங்கே ஓடி விளையாடிக் கொண்டிருந்த சிறுவர் சிறுமியர்கள் அவளின் கவனத்தை ஈர்த்தனர். அங்கே விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவன் ஒரு சிறுமியின் பந்தை பிடுங்கி கொண்டு தராமல் இருக்கலாம் அதை தட்டி கேட்க கதாநாயகன் போல மற்றொரு சிறுவன் வந்தான். அவன் வந்து அவனிடமிருந்து பந்தை வாங்கி அவளிடம் கொடுத்து விட்டு சிரித்தான்‌. அவளுக்கு அதை பார்த்த போது தன் காதலனுடனான முதல் சந்திப்பு நினைவுக்கு வந்தது.

அன்று காலை எப்பொழுதும் போல சாதாரணமாக தான் விடிந்திருந்தது. அவள் கிளம்பி சென்ற நேரத்திற்கு அவள் எப்பொழுதும் செல்லும் பேருந்தை தவற விட்டு விட்டாள். பேருந்தில் கூட்ட நெரிசலில் செல்வது அவளுக்கு பிடிக்காதாகையால் அவள் எப்பொழுதும் எட்டரை மணி வகுப்பிற்கு அரை மணிநேரம் முன்னதாக செல்லும் ஏழரை மணி வண்டியிலேயே சென்று விடுவாள். ஆனால் அன்று நேரமானதால் எட்டு மணி வண்டிக்காக காத்திருந்தாள். அவள் காத்திருந்த நேரத்தில் சில ரோமியோக்கள் அவளுக்கு அம்பு விட முயன்று கொண்டிருந்தனர். அவள் தள்ளி செல்ல செல்ல அவர்களும் நெருங்கி நெருங்கி வந்து கொண்டிருந்தனர். இன்று பிரச்சினை ஆகாமல் சமாளிக்க முடியாதா என்று எண்ணி தவித்து கொண்டிருந்த வேளையில் அவன் வந்தான்.

அவன் பெயர் கார்த்திக். அவளது கல்லூரி தான். இளங்கலை அறிவியல் எடுத்து படித்து வந்தான். அவள் இளங்கலை பொருளாதாரம். அவனை அவ்வப்போது பார்த்த நினைவு. சட்டென வந்தவன் அவளிடம் நெருங்கி வந்து நெருங்கிய தோழன் போல் பேச ஆரம்பித்தான். அவள் பயந்து விலக முயற்சிக்க கண்களாலேயே பயப்படாதே என்னுடன் ஒத்துழை என்ற அவனின் கட்டளைக்கு இணங்கி அவனுடன் ஒன்றி நின்றாள். அவள் தோழன் வந்தவுடன் மற்ற ரோமியோக்கள் எல்லாம் ஒதுங்கி விட அவளுக்கு அப்பாடா என்றிருந்தது. அவனுடனே பேருந்தில் ஏறி எந்த வித பிரச்சினையும் இன்றி கல்லூரிக்கு வந்து சேர்ந்தாள். அவனுக்கு நன்றி சொல்ல எண்ணி பேருந்தில் இருந்து இறங்கியவுடன் அவனை தேடினால் அவனோ அவளிடம் எதுவும் சொல்லி கொள்ளாமல் சென்று கொண்டிருந்தான். வகுப்புக்கும் நேரமாகி விட அவள் அவனை மறந்து விட்டு வகுப்புக்கு சென்றாள்.

அவனை மறந்ததாக நினைத்து தான் அவள் சென்றாள். ஆனால் பாடநேரம் முழுவதும் அவன் நினைவே அவளை ஆக்கிரமித்திருந்தது. மாலை அவனை தேடி சென்று நன்றி கூறினாள். அவள் கூறியதை பொறுமையாக கேட்டு கொண்டினுந்தவன் அவள் பேசி முடித்ததும் எனக்கு உன்னை பிடித்திருக்கிறது. உன்னை வெறும் தோழியாக மட்டுமே எண்ண என்னால் இயலவில்லை. நிறைய நாட்களாக உன்னை பார்த்து கொண்டிருக்கிறேன். உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று படபடவென பேசி விட்டு சென்றான்.

அவள் ஏதும் புரியாமல் நின்றிருந்தாள். அவளுக்கு இது புதிய அனுபவம். இன்று காலை வந்த ரோமியோக்களை போல் தூரத்தில் இருந்த துரத்தும் பலரை அவள் சந்தித்திருக்கிறாள். ஆனால் இவ்வாறு நேரடியாக முகத்திற்கு நேராக ஒருவன் இவ்வாறு பேசி சென்றது இதுவே முதல் முறை. அவளுக்குள்ளும் ஒரு படபடப்பு இருந்தது. ஆனால் இது காதலாக மாறாது என நம்பி அவள் அங்கிருந்து சென்றாள்.

ஆனால் அவளுக்கு தெரியாது. இன்னும் ஒரு மாதத்தில் அவனை காதலிப்போம். அவனின்றி ஓரணுவும் அசையாது என்ற நிலைக்கு மாறுவோம் என்று.

அந்த நிகழ்வுக்கு பின் அவள் அவனை சந்திக்கவில்லை. அவன் பின்னால் சுற்றி வந்து தொல்லை தரும் ரகம் அல்ல என்று எண்ணிக் கொண்டாள். ஆனால் அவளுக்கே தெரியாத விசயம் அவன் அவளை தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் இருந்து பின் தொடர்ந்து வந்தது. அன்றொரு நாள் அப்படித்தான் வகுப்புகள் முடித்து விட்டு பேருந்து நிலையத்திற்கு வர வர பேருந்து வந்துது. இதிலேயே சென்று விடலாம் என்றெண்ணி அவள் ஓடி வர அவள் அணிந்திருந்த தாவனி தட்டி விட்டு கீழே விழ போனாள். எங்கிருந்து வந்தான் என தெரியாமல் திடீரென வந்தவன் அவளை தாங்கி பிடித்தான். அந்த அதிர்ச்சியில் இருந்து அவள் மீளவில்லை. அப்படியே அவளை கைத்தாங்கலாக அழைத்து சென்றவன் பக்கத்தில் இருந்த அடுமனைக்கு அழைத்து சென்று டீ வாங்கி கொடுத்தான். அதை வாங்கி பருகியவள் சர்க்கரை அதிகமாக இருக்கவே முகம் சுளித்தாள். அதிர்ச்சிக்கு நல்லது என்று நான் தான் போட சொன்னேன். குடி என்று சொல்ல அதை வேதவாக்காக எடுத்து கொண்டு அதை முழுவதும் குடித்து முடித்தாள்.

அடுத்தடுத்து இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தன. பேருந்தில் ஒருவன் பிரச்சினை பண்ணிய போது வந்து காத்தது, கல்லூரியில் உணவு விடுதிக்கு செல்லும் போது அவளுக்கு மட்டும் எல்லாம் சூடாக சுவையாக வந்தது, உடன் படிக்கும் ஒருவன் முதல் நாள் திட்டி விட்டு மறுநாள் வந்து மன்னிப்பு கேட்டதென தினமும் அவன் இருப்பை ஏதேனும் ஒரு வழியில் காட்டி கொண்டே இருந்தான்.

அன்று மாலை வகுப்பு முடிந்து தோழிகளுடன் வந்து கொண்டிருந்தவள் பின்னால் வந்த வண்டியை கவனிக்கவில்லை. எப்போதும் போல் வந்து அவளை இழுத்து காத்தவன் அதற்கு பின்னால் வந்த வண்டியை பார்க்காமல் விட்டு விடவே அது அவன் மேல் மோதியது. அதில் தூக்கி எறியப்பட்டவன் அப்போதே மூர்ச்சையாகி விட்டான்.

நண்பர்கள் அனைவரும் வந்து அவனை தூக்கி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல இவளும் உடன் சென்றாள். அந்த நாள் முழுவதும் அவன் கண் விழிக்கவில்லை. அவளும் அவனை விட்டு அகலவில்லை. அவன் சார்பாக அவன் வீட்டில் இருந்து வந்து யாரும் வந்து பார்க்காமல் போகவே அதை பற்றி அவன் நண்பர்களிடம் கேட்டாள்‌. அப்போதுதான் அவனின் இன்னொரு பக்கம் அவளுக்கு தெரிந்தது.

அவன் ஊரிலிருந்து வந்து படிக்கும் முதல் இளைஞன் இவன்தான். ஊரிலும் இவர்கள் வீட்டை யாரும் பெரிதாக மதிப்பதில்லை. இதற்கெல்லாம் விடையாக படிப்பை தேர்ந்தெடுத்தவன் நன்றாக படித்து இந்த கல்லூரியில் சேர்ந்தான்‌. அவனுக்கு ஒரே ஒரு அம்மா மட்டும்தான். அவர்களும் இது போன்ற செய்திகளை கேட்டால் அதிர்ச்சி ஆகி விடுவார்கள் என்பதற்காத அவர்களிடமும் சொல்லவில்லை என் கூறினார்கள். மருத்துவமனை பணத்திற்காக அவர்கள் பேசி கொண்டிருப்பதை பார்த்தவள் தன் சங்கிலியை கழட்டி கொடுத்து இதை வைத்து சமாளிக்குமாறு கூறினாள்.

அடுத்த நாள் மதியத்திற்கு மேல் தான் கண் விழித்தான். அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் கண் விழித்த பிறகுதான் உயிரே வந்தது போலானாள். கண் விழித்ததும் அவளை கண்டவன் உனக்கு ஏதும் ஆகவில்லையே என்று கேட்டான். அதை கேட்டு உருகிய அவள் உடைந்து அவனை கட்டிப்பிடித்து அழ ஆரம்பித்தாள். பின் அவனை விட்டு விலகி

"சீக்கிரம் சரியாகி விட்டு வா. இன்னும் மூன்று மாதங்கள் தான் உள்ளது. அதற்குள் நிறைய காதலிக்க வேண்டும்" என்று வெட்கப்பட்டு கொண்டே கூறி விட்டு சென்றாள். அவனுக்கும் சந்தோசம் தாளவில்லை.

அதன்பின் அவர்கள் போகாத இடமே இல்லை என்கிற அளவுக்கு எல்லா இடத்திற்கும் சென்றார்கள். இதில் முதல் தீண்டல் முதல் முத்தம் என எல்லாவற்றையும் அனுபவித்தனர். படிப்பு முடிந்து அவன் மேல் படிப்புக்காக பட்டணம் செல்ல அவளும் வீட்டில் எப்படியோ சம்மதம் வாங்கி அவளும் அதே கல்லூரியில் சேர்ந்தாள்.

அவன் படிப்பில் நாட்டத்துடன் இருந்து நன்றாக தேறி வந்தான். இவளுக்கு அவனுடன் இருப்பதே பெரிய நாட்டமாக இருக்க அங்கொன்றும் இங்கொன்றுமாக காலத்தை காதலில் கரைத்து கொண்டிருந்தாள். அந்த படிப்பும் முடித்து விட அவனுக்கு வெளியூரில் ஒரு பெரிய இடத்தில் நல்ல வேலை கிடைத்தது. அதை கொண்டாட இருவரும் வெளியே சென்றார்கள். ஆனால் இருவருக்கும் தெரியாது. அதுதான் அவர்களின் கடைசி சந்திப்பாக இருக்கும் என்று.

அன்று வெளியே சென்றவர்கள் முதலில் கோவிலுக்கு சென்று கடவுளுக்கு நன்றி செலுத்தி விட்டு படத்திற்கு சென்றார்கள். அதையும் முடித்து விட்டு மாலை சிற்றுண்டிக்காக பெரிய ஓட்டலுக்கு சென்றார்கள். அங்கே அவர்கள் சாப்பிட்டு கொண்டிருக்கும் அப்போது அங்கே வந்த அவளின் சித்தப்பாவின் கண்ணில் பட்டது எந்த கடவுளின் நேர்த்தி கடன் குறைபாடு என்று தெரியவில்லை. அவனை அந்த இடத்திலேயே அடித்து விட்டு அவளை தரதரவென வீட்டிற்கு இழுத்து சென்றார்.

வீட்டில் எப்போதும் போல் அவன் யார் என்ன சாதி மதம் என்று கேட்டார்கள். அவன் அவர்களை விட தாழ்ந்த வகுப்பில் பிறந்தவன் என்று தெரிந்த போது தாம் தூம் என குதித்தனர். எதற்கும் அவள் ஒத்துழைக்கவில்லை என தெரிந்த அவர்கள் பிரம்ம அஸ்திரமாக தற்கொலை மிரட்டலை ஏவினார்கள். அவள் எதற்கும் அசைந்து கொடுக்காமல் இருக்கவே அவளை எங்கேயும் விடாமல் வீட்டிலேயே காவல் வைத்தனர். இப்படியே மூன்று மாதங்கள் ஓடி விட்டன. இந்த நேரத்தில் பலமுறை அவனும் வந்து பார்க்க முயற்சி செய்து எதுவும் நடக்கவில்லை.

ஒரு சிறுவன் கீழே விழுந்து அழ ஆரம்பிக்க அவள் நிகழ்காலத்துக்கு வந்தாள். சிறுவன் அழுததாலேயோ இல்லை அவளின் நிலையை எண்ணியோ அவளின் கண்கள் தானாக கண்ணீரை சொரிந்தன. தூரத்தில் அவன் வருவதை பார்த்த அவள் கண்ணீரை வெகு சிரமப்பட்டு அடக்கி கொண்டாள்.

வந்தவன் அவளிடம் என்ன ஆச்சு என்று கேட்டான். அவள் இது சரிப்பட்டு வராது. பிரிந்து விடலாம் என்று கூறினாள். அதை கேட்டு அவன் ஏன் என்று கேட்டான்.

"எனக்கு அப்புறம் இரண்டு தங்கைகள் இருக்கிறார்கள். இப்போது நான் வேறு சாதியில் கல்யாணம் செய்தால் அது அவர்களுக்கும் பிரச்சினையாக முடியும் என்று கூறினாள். அவன் ஏதேதோ சொல்ல வர எதையும் கேட்காமல் அவனை இழுத்து அணைத்து இதழணைத்தவள் விட்டு விலகி நடந்தாள். அவன் உடைந்து அழவே அதை கேட்க பொறுக்காமல் வெடுவெடுவென நடந்து சென்றவள் அவளின் வண்டியை எடுக்காமல் அவர்கள் எப்போதும் பயணம் செய்யும் பல்லவன் பேருந்தை நோக்கூ சென்றாள்

பின்.குறிப்பு:

காதல் இருமனம் சம்பந்தப்பட்டது. அதே கல்யாணத்திற்கு என வரும்போது அது இரு குடும்பம் என்பதையும் தாண்டி இரு இனங்களின் பிரச்சினையாகி விடுகிறது. காதலில் காதலிப்பவர்களின் பங்கை விட அவர்களை சுற்றி இருப்பவர்களின் பங்கு அதிகமாகும் போது அது காதலாக இல்லாமல் வெறும் கணக்காக மாறிப் போகிறது.

காலங்களில் அவள் வசந்தம்.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.