கண்ணாடி முன்பு நின்று சேலையை மடிப்பிட்டு பின் பண்ண, மொபைல் அழைத்தது. சுரேஷ் காலிங் ஒரு ஹார்டின் சிம்பலுடன் மென்னகையோடு மின்னினான் டிஸ்பிளேயில்.

நடுங்கும் விரல் கொண்டு எடுத்தவள் மென் குரலில்,
"ம்ம்ம்... கிளம்பிட்டேன்..."

"இல்ல எந்த சந்தேகமும் வரலை. எனக்கு தான் தப்பு பண்ணுற மாதிரி பீல்லாகுது..."

"அப்படி சொல்லாத சுரேஷ் பிளீஸ்..."

"சரி வெய்ட் பண்ணுறேன்...சீக்கிரம் வா...ம்ம்ம்..சரி.."

முழுதும் ரெடியானவள் கீழே இறக்கி வர, டைனீங் டேபுளில் அமர்ந்து உணவுண்டு கொண்டிருந்த தந்தையை பார்த்தவள் தலை குனிந்தவாறு இரு அடி முன்னே சென்றாள்.

சுரேஷ் என்ற பெயர் கேட்டு சட்டென திரும்ப, டிவியில் வரும் விளம்பரம். அதில் அன்னை தந்தையோடு கோவிலில் ஒரு பெண் சாமி கும்பிட்டு கொண்டிருக்க, வெளியில் அவள் காதலன் அவளுக்காக காத்திருப்பதாக தோழி கூறிச் சென்றாள். அவள் அன்னைக்கு பயம் தந்தையோ நம்பிக்கையுடன் இருந்தார். கோவிலை விட்டு வெளியே வந்தவள் காத்திருக்கும் காதலனை பார்த்தவாறு அவனை தாண்டி செல்கிறாள். ஒரு விளம்பரத்தில் கூட தந்தை மகளின் பாசத்தையும் நம்பிக்கையும் முன்னிலை படுத்திருக்க, அதை பார்த்தவாறு தயங்கி நின்றவள் தந்தை அழைத்ததை கவனிக்கவில்லை.

"கீர்த்திம்மா அப்பா உன்னை காலேஜ்ல ட்ராப் பண்ண வரவா...?" என்ற கேள்வியில் விழித்தவள் அவசரமாக, "இல்லப்பா வேண்டாம் நான் காலேஜ் பஸ்ல போய்கிறேன்" என்று வேகமுடன் வெளியே வந்தாள்.

வாசலில் அன்னை நின்று கொண்டு, "என்னடி இன்னைக்கு எதுக்கு புடவ காட்டியிருக்க ?" என்க, "வனி கூட கோவிலுக்கு போறேன்ம்மா" என்று நகர இருந்தவளை நிறுத்தி அவள் தலையில் பூ சூடினார். கீர்த்திக்கு விழியோரம் பனிந்தது.

எப்போதும் கல்லூரி பேருந்தில் செல்பவள் பேருந்து சென்ற பின்னும் அதே பேருந்து நிறுத்தத்தில் காத்துக் கொண்டிருந்தாள்.

காலையில் எழுந்து சமையல் வேலைகள் அனைத்தையும் முடித்த சரவணன் அலுவலகத்திற்கு தயாராகி வர, அப்போது தான் எழுந்து ரூம்பிலிருந்து வெளியே வந்தாள் சுஜி. அவள் அருகே வந்து நெற்றி முடிகளை கோதி நெற்றியில் முத்தமிட, அவள் முகம் லேசாக நாணம் பூசி சிவந்தது.

"சாப்டிங்களா...?"

"ம்ம்ம்..நீயும் சீக்கிரம் சாப்பிடுடா. ஏதாவது ஒன்னுனா உடனே கால் பண்ணு. நாவேணா இன்னைக்கே லீவ் போடவா ?"

"ஏன்ப்பா நாளைக்கு இருந்து லீவ் ஸ்டார் ஆகுதே அப்பறம் இன்னைக்கு எதுக்கு லீவ் போடணும் ?, போயிட்டு வாங்க "

"இல்லடா உன் முகமே ஒருமாதிரியா தெரியுதே..அதான்.."

"எதாவதுனா நான் கால் பண்ணுறேன். நீங்க இப்போ கிளம்புங்க "

வாசல் வரை வந்த விவாதம் நின்றுவிட, அவள் கன்னம் தடவியவன் குனிந்து அவளின் நிறை குடமாய் மேடிற்ற வயிற்றில் இதழ் பதித்து தலையசைப்புடன் விடைபெற்றான்.

புன்னகை முகமாக திரும்பியவளிடமிருந்து புன்னகை திரும்பியது. நேற்று இரவிலிருந்தே அன்னையின் நினைவு அதிகமாகவே தாங்கியது தன் வயிற்றின் மீது கை வைத்து மென்மையாக தடவியவள் உள்ளே சென்றாள். தாய்மை அடைந்த பினிருந்தே அன்னையின் அன்பிற்க்காக அதிகம் ஏங்கினாள்.

மெல்ல உணவுண்டு எழ அடிவயிற்றில் ஒரு வலி. டெலிவரிக்கு இன்னும் ஒரு வாரமிருக்க இப்போது திடீரென்று வலியை உணர்ந்தாள். லேசான வலிதான் என்று சிறிது நிமிடங்கள் பொறுத்தவளாள் அதற்கு மேலும் தாங்க இயலாது சரவணனுக்கு அழைத்தாள்.

கீர்த்திக்கு ஒரே பயம் யாரேனும் பார்த்துவிடுவார்களோ?, உறவினர்கள் அப்பாவின் நண்பர்கள், அண்டை வீட்டார், யாரேனும் பார்த்து விட்டால் என்ற படபடப்பு அதிகரித்துக் கொண்டே இருந்தது. தன்னை தாண்டி செல்வபவர்கள் எல்லாம் தன்னையே பார்ப்பது போன்ற பிரமை. முதல் முதலாக தவறு செய்யும் குழந்தையை போன்ற பயம் அவளிடத்தில்.

சுரேஷ் சீக்கிரம் வாயேன்டா என மனதிற்குள் திட்டிக் கொண்டிருக்க, அதிவேகமாக வந்தவன் அவளருகே சடன் பிரேக்கிட்டு நின்றான்.

மல்லிகை சூடி, மஞ்சள் பட்டில் தேவதையாக மின்னியவளை இமைக்காது பார்த்தவன் தன்னையே மறந்தான்.

"சுரேஷ் சீக்கிரம் பைக்கை ஸ்டார்ட் பண்ணு...யாராவது தெரிஞ்சவுங்க பாத்துருவங்க...சுரேஷ் உன்னத்தான்டா..சுரேஷ்..." என்றவளின் பதட்டத்தில் தன்னிலை உணர்த்தவன் பைக்கை ஸ்டார்ட் பண்ண, அவன் தோளில் கை போட்டு பின்னே அமர்ந்தாள்.

ரிவர்ஸ் மிரரில் அவளை பார்க்க, கழுத்தில் வியர்வை பூக்க, கண்களில் பதைபதைப்போடு தலைகுனிந்தவாறு அமர்ந்திருந்தாள்.

ஒருவாரத்திற்கு முன் கீர்த்தியின் நிச்சியத்திற்கு அப்படி செய்யவேண்டும், இப்படி செய்யவேண்டும் என்று அகமகிழ தந்தையிடம் கூறிக் கொண்டிருந்த அன்னையின் முகம் அவளின் நினைவில் வந்தது.

நாளை மறுநாள் நிச்சியம், மூன்று மாதத்தில் படிப்பு முடிந்த பின் திருமணம் என பெற்றவர்கள் முடிவு செய்திருந்தனர்.

சிறிது தூரம் சென்றிருக்க அதற்க்குள்ளாகவே சுரேஷின் மொபைல் நான்கு முறை அழைத்திருந்தது. அவனோ அதை அட்டன் செய்யாது பைக்கின் வேகத்தை கூட்டினான்.

தங்கள் குழந்தை அவள் நிறத்தில், அவள் அழகில், அவள் சாயலில் ஒரு தேவதையாக இருக்குமென கண்கள் காண தன் மகளை கற்பனையில் கண்டவாறு அலுவலகம் நெருங்கிருந்தான் சரவணன்.

அதே நேரம் மொபைல் அழைக்க அதுவும் டிஸ்பிளேயில் சுஜியின் புகைப்படம் தெரிந்தது. இரண்டாவது ரிங்கிலே அட்டன் செய்தவன் அவள் வலி என்றதுமே மறுநிமிடம் மீண்டும் வீட்டிற்கு காரை திருப்பினான்.

வீட்டிற்குள் நுழையும் போதே அவள் வலியில் துடிக்கும் முணுமுணுப்பு ஒலி கேட்டு விரைந்தோடினான். ஒருகையால் பின் இடுப்பை பற்றியிருந்தவள் மறுகையால் அடிவயிற்றை பற்றியிருந்தாள். முகம் முழுவதும் சிவந்து அவளின் வலியை பிரதிபலிக்க, கீழ் உதடை அழுந்திக் கடித்துக் கொண்டிருந்தாள்.

அவளை அப்படி பார்க்க சரவணனுக்கு உயிரே துடித்தது, தாமதிக்காது. அவளை அழைத்து பின்னிருக்கையில் அமர்த்தியவன் காரை ஸ்டார்ட் பண்ணினான். அவன் கதறல் அவனுக்குள் தைரியத்தை இழக்க செய்ய பயம் கலந்த பதட்டமுடன் வண்டியோட்டினான்.

அவனையும் அறியாமல் அவன் கண்களில் கண்ணீர் நிறைந்திருக்க எதிரே வரும் வாகனம் தெளிவின்றி தெரிந்தது.

பின்புற இருக்கையில் வலியில் துடித்தவள் பற்றுதலின்றி முன்னிருக்கையில் இருந்த அவன் தோளில் கைவந்து அழுத்தினாள். அதிலே அவள் வலியின் வலிமை உணர லேசாக பக்கவாட்டில் அவளை பார்த்தவாறு தன் தோளிருந்த அவள் கையை ஆறுதலாக பற்றி அழுத்தினான்.

கீர்த்தியின் மனதில் லேசான ஒரு குற்ற உணர்வு உறுத்துதலாக இருந்தது. அதிலே அவள் கண்கள் கலங்கி விட அதை மிரரில் பார்த்த சுரேஷ் லேசாக திரும்பி தன் தோளில் பதிந்திருந்த அவளின் கையை ஆறுதலாக பற்றி அழுத்தினான்.

முன்புறம் திரும்ப எதிரே வேகமுடன் அருகில் ஒரு கார் வருவதை பார்த்து பக்கவாட்டில் வேகமாக திரும்பியவனின் பைக் மரத்தில் மோதி இருவரும் கீழே விழுந்தனர்.

சுஜியின் கைபற்றியவாறு முன் திரும்பிய சரவணன் எதிரே வந்த பைக்கை பார்த்ததும் சட்டென இடதுபுறம் திருப்பினான் வேகமுடன். ஏற்கனவே தவறான பாதையில் வந்தும் அவனே காரை திருப்பிய வேகத்தில் சாலையோர சுவற்றில் மோதி ஒருபுறம் கவிழ்ந்தது.

கீர்த்திக்கு கையில் ஆழமான அடிபட்டு இரத்தம் கசிந்தது, சுரேஷ் லேசான சிராய்ப்புடன் எழுந்துவிட அவளையும் தூக்கி விட்டான். அதற்குள் சரவணன் மற்றும் சுஜியின் குரல் கேட்டு அவர்களின் அருகே சென்றவன் அவர்களின் நிலைபார்த்து உதவினான். காரை பள்ளத்திலிருந்து வெளியே எடுத்தவர்கள் மருத்துவமனைக்கு செல்லவேண்டிய கட்டாயமாகவே சுரேஷ் காரோட்டினான்.

உள்ளுக்குள் வலியிருப்பினும் சுஜியின் நிலை பார்த்த கீர்த்தி தன் வலியை தாங்கிக் கொண்டு அவளுக்கு உதவினாள். சரவணனின் மடியில் படுத்திருந்த சுஜிக்கு வலி அதிகரிக்க அதிகரிக்க அவளின் அலறல் குறைந்து கொண்டே வந்தது. அதாவது மெல்ல மெல்ல மயக்க நிலைக்கு செல்ல தொடங்கினாள். அதை தடுக்கும் விதமாக சரவணன் உரையாடியவாறு வந்தான்.

ஒவ்வொரு முறையும் வலியில் அவள் அம்மா..அம்மா..என்ற அலறலில் அவளின் அன்னையை அழைப்பதை போன்றே உணர்ந்த சரவணன் குற்றவுணர்வும்,பயமும் கலக்க தன்னிலை மறந்து புலம்பிக் கொண்டிருந்தான். இதை பார்த்த சுரேஷுக்கு அந்த இடத்தில் கீர்த்தியையும் தன்னையும் கற்பனையில் பார்க்க சரவணன் உணரும் வலியை அப்போதே உணர்ந்தான்.

"எல்லாத்துக்குமே நான் தான் காரணம் சுஜிம்மா. ஊருக்கே இளவரசியா இருந்த உன்னை நான் தான் கூட்டிட்டு வந்து கஷ்டப்படுத்திட்டேனே. எல்லாமே என்னோட அவசரத்தால தான். உன்ன உன்னோட அம்மாகிட்ட இருந்து பிரிச்சிட்டேனே சுஜி. இப்போ நீ உன் அம்மாவை கூப்பிடும்போது என்னால அவங்களை உன் முன்னாடி நிற்கவைக்க முடியலையே.

சுஜி கண்ண திறடி... இங்க பாரு..என்ன பாரும்மா...நம்ம பாப்பா என்ன சொல்லுறான்னு என்கிட்ட சொல்லும்மா..." என்ற அவன் புலப்பல் மருத்துவனைக்குள் வந்தும் நிற்கவில்லை.

சுரேஷ் அவனுக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருந்தான். ஆறுதலான தோள் கிடைக்கவே தான் வேதனை மொத்தத்தையும் தன் காதல் கதையோடு சேர்த்து கூறினான். சுஜிக்கு ஆப்ரேஷன் நடந்து கொண்டிருக்க, கீர்த்தியும் தன் காயத்திற்கு ட்ரீட்மென்ட் பண்ணிக் கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்தில் தன்னிலை அடைந்த சரவணைக்கு அடுத்ததாக தன் மனைவி குழந்தை பற்றிய கவலையில் பதைபதைப்புடன் இருந்தான். ஆப்ரேஷன் நல்ல படியாக முடிய அவன் ஆசைப்படியே பெண் குழந்தை பிறந்தது. சிலமணி நேரத்திற்கு பின்னே பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.

அதிலே நண்பகல் தாண்டியிருந்தது. முதலில் சரவணன் பார்த்து வந்த பின் அவன் ஸ்வீட் வாங்க செல்ல, கீர்த்தியும் சுரேஷும், குழந்தையும் சுஜியையும் பார்த்து நலம் விசாரித்துக் கொண்டிருந்தார். அறையின் கதவு திறந்திருக்க அந்த வழியாக சென்ற ஒரு பெண்மணி மீண்டும் திரும்பி அறைக்குள் வந்தார்.

"கண்ணு நீ மாணிக்கம் மகள் சுஜி தானே...?, ஆமா எப்படி இருக்க..?,சரவணனை காணும்..?"

"நல்லா இருக்கேன்..,அவரு வெளிய போயிருக்காரு.."

"அம்மாடி குழந்தை பிறந்திருக்கா..?,என்ன குழந்தை..?"

"பெண் குழந்தை ஆன்டி..."

"அப்படியா சந்தோசம் இந்த பொண்ணையாவது உன்ன மாதிரியில்லாம நல்லதை சொல்லி வள..,அப்புறம் சரவணன் தங்கச்சிக்கு கல்யாணமாம் உங்களுக்கு இப்பவாது அழைப்பு வந்துச்சா..?"

வந்தவர் பேசிக்கிக்கொண்டே இருக்க சுஜியின் கண்கள் கலங்கியது. அவர்கள் ஓய்வு எடுக்க வேண்டும் பின்பு வந்து பேசுங்கள் என்று ஒருவாறு சமாளித்து அந்த பெண்மணியை வெளியே அனுப்பினான் சுரேஷ்.

கீர்த்தி அவளுக்கு ஆறுதல் சொல்ல, "சரவணன் தங்கச்சி கல்யாணத்துக்கு கூட போக முடியலையே..!எல்லாம் என்னால என் அவசரத்தால தான் என் படிப்பைக் கூட முழுசா முடிக்கலையே..! அவன் குடுப்பத்துல இருந்து அவனை மட்டும் பிரிச்சி எடுத்துக்கிட்டேன் நான் சுயநலவாதி தானே. நான் பண்ண தப்பு இப்போ என் பொண்ணுக்கும் ஒரு பேரை வாங்கிக் கொடுத்துருச்சே..!" என்று அழுகையுடனே புலம்பினாள்.

"அச்சோ அழாதீங்க சுஜி...எல்லாமே உங்க காதலுக்காக தானே உங்க சரவணனுக்கு தானே பண்ணீங்க..அப்பறம் எதுக்கு அழுக்குறீங்க?"

"அவரு பொறுமையா இருப்போம். வீட்டுல பேசலாம்னு சொன்னாரு நான் தான் எங்க வீட்டுல இருக்குறவுங்க மேல நம்பிக்கை இல்லாம அவரச படுத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்...அதுல அவங்க வீட்டை பத்தியும் நான் சித்திக்களையே..!"

இதை கேட்டவாறு இருந்த சுரேஷுக்கு உள்ளம் பிசைந்தது. தான் செய்யவிருக்கும் அவசர செயலின் பின் விளைவு இவ்வாறு தான் இருக்குமோ என்ற பயம் முதல் முதலாய் வந்தது.

சுஜியின் கையை ஆறுதலாய் பற்றிய கீர்த்தி," இப்போ குழந்தை பிறந்துருக்க விஷயத்தை முதல உங்க வீட்டுக்கு சொல்லுங்க சுஜி.." என்க சரவணன் உள்ளே ஸ்வீட்டுடன் வந்தான்.

அவன் வரவே நொடியில் தன் கண்ணீரை அவனறியாது கட்டுப்படுத்திக் கொண்டு புன்னகைத்தாள் சுஜி. அதையே பார்த்துக் கொண்டிருந்த சுரேஷ்க்கு என்னதான் அவர்கள் சந்தோஷமாக வாழ்ந்தாலும் இருவரின் மனதிற்குக்ள்ளும் நெருடலாய் ஒரு குற்றவுணர்ச்சி உள்ளது என்பதை உணர்ந்து கொண்டான். குற்றவுணர்வுடன் வாழும் வாழ்க்கை நிம்மதியற்றது தானே.

குழந்தை அழ ஆரம்பிக்க, தொட்டிலில் கிடந்த குழந்தையின் புறம் பார்த்தாள் சுஜி. கீர்த்தி கையில் கட்டுடன் நிற்கவே குழந்தையின் அருகில் சென்ற சரவணனுக்கு அதை எப்படி தூக்குவது என்றே தெரியவில்லை அவன் குழந்தையை தூக்க முயற்சிக்க ஒரு நர்ஸ் உள்ளே வந்தார்.

அவரே குழந்தையை தூக்கி சுஜியிடம் கொடுத்து, " வீட்டுல இருந்து பெரியவங்க யாரும் வரலையாம்மா ? "என கேட்டவாறு சுஜியை கவனிக்க மற்ற மூவரும் வெளியே வந்தனர்.

சரவணன் இருவருக்கும் நன்றி கூற, அவனிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினார் இருவரும். எதிர் அறையில் ஒரு பெண்ணிற்கு குழந்தை பிறந்திருக்க அவர்களின் மொத்த குடும்பமும் கூட்டமாய் சூழ்ந்திருந்து மகிழ்வுடன் இனிப்பு வழங்கி, வாழ்த்துச் சொல்லிக் கொண்டிருந்தார்.

இருவரும் வெளியில் வர மீண்டும் நண்பனிடமிருந்து சுரேஷுக்கு இருபதாவது முறையாக அழைப்பு வந்தது. "சொல்லுடா கார்த்திக்" என்றான்.

"எங்கடா போன ?, கீர்த்திய கூட்டிட்டு வரத்தானே போன..? இவ்வளோ நேரமா ரெஜிஸ்ட்டர் ஆபீஸ் மூடப்போறாங்க. சீக்கிரம் வாங்கடா.., உனக்கெல்லாம் மாலை வாங்கி, மாங்கல்யம் வாங்கி காத்துக்கிட்டு இருக்குற எங்களுக்கு வேற வேலை இல்லையாடா..?" உரிமையை கொண்ட கோபத்துடன் நண்பன் திட்ட, " சரி சரி..கிளம்பிட்டேன் இதோ வரேன்.." என்றாவாறு கால் கட் பண்ணினான்.

கீர்த்தி பின்புறம் அமர வண்டியை ஸ்டார்ட் பண்ணினான். இருவருமே சிந்தையில் இருக்க மௌனமாக வந்தனர். கீர்த்திக்கு சுரேஷுடனான தன் வாழ்வு எப்படி இருக்கும் என்ற சிந்தனை. சுரேஷ்க்கு நான் தான் அவசர படுகிறேன் என் செயல் இருவீட்டின் பெற்றோருக்கு கவலையை தரும், மேலும் அவர்கள் மேல் நம்பிக்கை இல்லாமல் தான் இவ்வாறு செய்தோம் என்பது போன்றதொரு பிம்பத்தையும் தரும். மேலும் சுஜியின் வலி நிறைந்த கதறல் கண்முன்னே வர என் கீர்த்திக்கு என்னால் அப்படி ஒரு நிலை வரக்கூடாது என்று உறுதி கொண்டான்.

பைக்கை நிறுத்திய பின்னும் அவள் இறங்காமல் இருக்க, கீர்த்தியென அழைத்தான். அவன் அழைப்பில் நிமிர்ந்தவள் முன்புறம் பார்க்க தன் வீடு. அமைதியுடன் இறங்கியவள் அவன் கண்களை ஒருமுறை பார்த்துவிட்டு விழிகலங்க விலகினாள். உள்ளே செல்ல இருந்தவளின் கரம் பற்றி நிறுத்தினான். அவள் திரும்ப அவள் கரம்பற்றியவன் அவனும் அவளோடு உள்ளே சென்றான்.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.